Tuesday, April 3, 2007

ஆவணக் களவும் ஆணவக் கனவும்


பா
ரிசில் உயிர்நிழல் ஆசிரியர் லக்சுமியின் வீடு உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று (19.3.07) பிற்பகல் 3 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் யாரும் வீட்டில் இல்லாத நேரம் இது நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கலை இலக்கிய ஈடுபாடு கொண்டு புகலிடத்தில் தொடர்ச்சியாக செயற்பட்ட கலைச்செல்வன் லக்சுமி ஆகியோரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்களே களவுபோயிருக்கின்றன. சேகரித்து வைக்கப்பட்டிருந்தவற்றுள் -களவுக்குத் தேவைப்படாத- இரண்டு „ஒளிவீச்சு“ ஒளிநாடாக்களும் மேசையின்மீது பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர்நிழல் சஞ்சிகையை தனியாக நின்று லக்சுமி கொண்டுவருகிறார். உயிர்நிழல் ஒரு அரசியல் விமர்சன ஏடுமல்ல.
1989 இலிருந்து தொடர்ச்சியாக புகலிடத்தில் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கியச் சந்திப்பு சம்பந்தப்பட்ட ஒலி ஒளி நாடாக்கள் டிவிடிக்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் களவாடப் பட்டிருக்கின்றன. இச் சந்திப்புகளில் ஜனநாயக மறுப்புகள் பற்றிய பேச்சுக்களும் அரசியல் விமர்சனங்களும் இடம்பெறுவதுண்டு. இந் நிகழ்வுகளின் பதிப்பை ஆவணப்படுத்தி பாதுகாப்பது ஒரு சமூகநலத்தின் அக்கறைக்குட்டபட்ட தேவையாகும். இவைகளை களவாடுவது, அழிக்கமுயல்வது மனிதஉரிமையை, அதன் குரல்வளையை நசுக்குவதற்கு ஒப்பான செயலாகும். இவ்வாறு நிகழ்ந்ததையும் பார்த்துக்கொண்டிருப்பது-மௌனித்திருப்பது மனித உரிமைக்கு குரல் கொடுப்பதாய் மேடைகளில் மட்டும் பிதற்றுவதற்கு ஒப்பானது.

மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரக் குரல்களுக்குள்ளேயே எதையோ தோண்டித் துளாவுமளவுக்கு அதுவும் புகலிடம்வரை பாதாளப்பட்டுப் போயிருக்கிறது "ஜனநாயகம்“ என்பதை நிரூபிக்கும் இன்னொரு சம்பவம்தான் இந்த ஆவணக் களவு. விடுதலை பற்றிய கனவுகளின் சிதைவுகள் தொடர்ந்தும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதையன்றி வேறு எதைச் சாதித்துவிட முடியும் இந்த ஜனநாயக மறுப்புகளால்!
0
நன்றி: ஊடறு
மேலும் பிற தளங்களில் இருந்து வாசிக்க:
தமிழரங்கம்
சத்தியக்கடதாசி
(((((((()))))))))))))))
தேன
asian tribune

Thursday, March 15, 2007

அரசியலுக்கு லாடம் கட்டும் முயற்சி தேவைதானா!

மக்கள் விரோத வலதுசாரிய அரசியலுக்கு லாடம் கட்டும் முயற்சி தேவைதானா!

பி.இரயாகரன்

23.04.2006

ண்மையில் மரணமடைந்த புஸ்பராஜா பற்றி, பலரும் எதிர்பார்த்தது போல் நான் எதையும் எழுதாமல் இருந்தேன். அவரின் 35 வருட அரசியல் சார்ந்த பொதுவாழ்வும், சில காலம் கடுமையான சித்திரவதையுடன் கூடிய சிறைவாழ்வும் என எதையும், அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முற்படாத ஒரு நிலையில் மரண நிகழ்வு நடந்தது. தனிப்பட்ட நட்பே முன்னிலைப்படுத்தப்பட்ட அஞ்சலிகளே எனது விமர்சனத்தை அவசியமற்றதாக்கியிருந்தது. ஆனால் ஒரு மாதத்தின் பின்பாக அவரை அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்தி, இதுதான் புரட்சிகரமான அரசியல் பாதை என்று அடையாளப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட ஒரு நிலையில், இவ் விமர்சனம் அமைகின்றது. அவரைப்பற்றி ஒரு ஒளித்தொகுப்பு ஒன்றைக் கூட வெளியிட்டவர்கள் "விதையாய் விழுந்தாய் விருட்சமாய் எழுவோம்" என்று அதற்கு தலைப்பிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் என்றால், புஸ்பராஜா மரணத்தின் முன்பே தனது மரணம் தெரிந்த ஒரு நிலையில், தன்னைப்பற்றிய ஒரு அரசியல் விளம்பரத்தை அடிப்படையாக கொண்டு ஒரு அரசியல் முன்முயற்சியையும் முன்னெடுத்து இருந்தார். இந்திய மக்களின் வாழ்வையே நஞ்சாக்கும் ஆனந்தவிகடனில் வழங்கிய இறுதிப் பேட்டி ஒன்றில், இறுதி தொலைகாட்சி பேட்டி (இது டான் தொலைக் காட்சி பேட்டி. இது மரணத்தின் பின் ஒரு மாதம் கழித்து வெளிவந்தது.), இறுதி கையெழுத்து உயில் என்று அவரே தன்னைப்பற்றி அமர்க்களப்படுத்திவிட்டு சென்றுள்ளார். இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் பிரமை கட்டமைக்கப்பட்டு, இது தான் புரட்சிகரமான நடவடிக்கையாக காட்டுகின்ற அரசியல் முயற்சி மீதான விமர்சனமே இது.

பொதுவாக விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் புலிக்கு மட்டுமல்ல, புலியின் எதிர்தரப்புக்கும் கிடையாது. வன்மம் கொண்ட காழப்புகள் இதன் பின் சுழன்றடிக்கின்றது. இதன் எதிர்வினை தனிப்பட்ட தூற்றுதலாகவே மாறுகின்றது. பொதுவாழ்வில் மரணமடைந்தவர்கள் மீதான விமர்சனத்தை செய்யும் போது, விமர்சனம் இருப்பவர்கள் கூட அதை மூடிமறைத்தபடி மிகச் சிறந்த அரசியல் நடிகராகி விடுகின்றனர்.

பொதுவாக புலியல்லாத தரப்புகள் தமக்குள் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்ற பொதுவான கண்ணோட்டம் காணப்படுகின்றது. புலிகள் தாம் அல்லாதவர்களை எதிரியாக கருதி, அவர்கள் மேல் திணிக்கின்ற வன்முறையையும், அது வழங்கும் அடையாளத்தினையும், புலியல்லாத தரப்பு தமது சொந்த அரசியல் அடையாளமாக கொள்கின்ற ஒரு பொது நிலையில், எமது விமர்சனங்களை இவர்கள் கூட புலிப்பாணியில் தான் எதிர்கொள்ளுகின்றனர்.

எமது விமர்சனங்கள் அரசியல் ரீதியாக அமைகின்ற போது, புலி மற்றும் புலியல்லாத பொதுத்தளத்திலும் கூட உள்நுழைந்து விடுகின்றது. ஒரு சரியான மக்கள் நலன் சாரந்த அரசியல், இந்த இரு பொது போக்குக்கும் வெளியில் தான் உள்ளது. இதுவே அரசியல் விமர்சனமாகின்றது.

வாழும் போது ஒன்றையொன்று குழிபறித்து முதுகுக்குப் பின்னால் அரசியல் செய்யும் கூத்துகள் சொல்லிமாளாது. ஆனால் மரணத்தின் பின் திடீரென தூக்கி நிறுத்தி கட்டமைக்கின்ற அரசியல் பிரமைகள் வேஷங்கள் அனைத்தும், தமிழ் பேசும் மக்களின் விடுதலையின் பெயரில் அரசியலாய் செய்யப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பது இது போன்ற இழிந்து போன முன்முயற்சிகளை தடுத்து நிறுத்தி, மக்களுக்காக அவர்களின் சொந்த பிரச்சனைகள் மீது போராடி உண்மையாக மக்களுக்காக வாழக்கோருவது தான்.

இதைப் புரிந்துகொள்ளாத பொதுவாழ்வும், தியாகங்களும் அர்த்தமற்றதாக, மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது. மக்களின் எதிரியாக உள்ள அரசியலுக்கு துணை போவது தான் நிகழ்கின்றது. நாங்கள் அதை புரிந்து கொள்ளமுடியாத அரசியல் அப்பாவிகளாக இருப்பது ஒருபுறம், இதைப் புரிந்தும் அதையே அரசியலாக நம்புவது மறுபுறம். புஸ்பராஜாவைப் போல், தியாகங்கள் புலிகளாலும் நிகழ்த்தப்படுகின்றது, புலியெதிர்ப்பு அணியிலும் நிகழ்தப்படுகின்றது. எப்படி இதைப் புரிந்து கொள்வது? இந்த தியாகங்கள் உண்மையில் மக்களுக்கானதாக இருப்பதில்லை. இது புஸ்பராஜாவுக்கும் விதிவிலக்கல்ல. இதை முதலில் நாம் புரிந்துகொள்வது வரலாற்றக் கடமையாகின்றது.

புஸ்பராஜாவின் கடந்தகால செயற்பாட்டை பற்றி நான்கு தளத்தில் பிரித்து ஆராய்வதன் மூலமே, சூக்குமங்களை கடந்து அவரை சரியாக நாம் இனம் காணமுடியும்.

1. 30, 35 வருடத்துக்கு முந்திய அவரின் கடந்தகால அரசியல் இறுதிகாலம் வரை மாற்றம் இன்றி இருந்ததையும், அது சார்ந்த அவரின் அரசியல் நடத்தைகள் பற்றியதும்.

2. புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டி நின்றது.

3. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற அவரின் நூல் தொடர்பானது.

4. தனது மரணம் தெரிந்த நிலையில், இதை அடிப்படையாக கொண்டு அவர் வழங்கிய பேட்டிகள், மற்றும் அவசர சந்திப்புகள், மற்றும் இறுதியாக அவர் எழுதி வைத்தவை.

நான்கு தளத்தில் பல உட்பிரிவுகளுடன் புஸ்பராஜா பற்றிய பிரமைகள் கட்டமைக்கப்படுகின்றன. எது எப்படி இருந்தாலும் கடைசி இரண்டு தான், இறுதி நேரத்தில் அவரைப்பற்றி சொல்வதற்கு பலருக்கும் ஒரு அடிப்படையை உருவாக்கி கொடுத்தது. புஸ்பராஜா கடைசி நிமிடத்தில் தன்னைப்ப்றி ஒரு விம்பத்தை கட்டுவதில், தீவிரமாக தானாகவே முனைந்தார். அவர் இதற்காக இந்தியா வரை கூட சென்றவர். தனது மரணம் இந்தியாவில் ஒரிரு நாட்களில் என்று தெரிந்தவுடன், அவசரமாக பிரான்ஸ் திரும்பி மரணித்தன் மூலம் கூட, தனது அனாதை மரணத்தைக திட்டமிட்டு தவிர்த்துக் கொண்டவர். இப்படி மிகவும் திட்டமிட்ட வகையில் தன்னை கட்டமைக்க முனைந்த புஸ்பராஜா பற்றி, நாம் அரசியல் ரீதியாக எப்படி புரிந்து கொள்வது.


அவரின் கடந்தகால நிகழ்கால அரசியல்


30, 35 வருடத்துக்கு முந்திய அவரின் கடந்தகால அரசியல் எந்த மாற்றமும் இன்றி இறுதிகாலம் வரை அப்படியே நீடித்தது. அவர் தன்னையும், கடந்தகால அரசியலையும் சுயவிமர்சனம் விமர்சனம் செய்தது கிடையாது. இது சார்ந்தே அவரின் அனைத்து அரசியல் நடத்தைகளும் இருந்தன. இந்த உண்மையை அரசியல் ரீதியாக ஆராயும் பட்சத்தில், அவை எந்த விதத்திலும் மக்களுக்கானவையாக இருக்கவில்லை.

1970களில் அவர் வரிந்து கொண்ட அரசியல் என்பது, அடிப்படையில் வலதுசாரிய அரசியல் தான். இந்த அரசியல் வழியில் இருந்து, அவர் என்றும் தன்னை சுயவிமர்சனம் செய்தது கிடையாது. அதை அவர் போற்றினார். அதை தனது பெருமைக்குரிய ஒன்றாக காட்டி, அந்தப் பிரமைகளுடன் மடிந்து போனவர். அவரை அறிமுகப்படுத்தியது அந்த அரசியல் தான் என்ற போதும் கூட, அது மக்களுக்கு எதிரான வலதுசாரிய அரசியல் என்பதை அவர் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. தன்னை தலித் என்றும், புலியெதிர்ப்பு அணியாகவும், புலம்பெயர் இலக்கியவாதியாகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினராக காட்டி, வாழ்ந்து மடிந்த காலத்திலும் கூட, ஒரு வலதுசாரியாகவே வாழ்ந்தவர். இந்த அரசியல் இடதுக்கு எதிரான மிகவும் வன்மமிக்க ஒரு அரசியலாகவும், இடதுக்கு எதிரான வன்முறையைக் கையாள்வதில் துணை போவதில் பின்நிற்காத ஒருவராகவே இருந்தார். இடதுக்கு எதிராக ஜனநாயக மறுப்பாளராகவே எதார்த்ததில் வாழ்ந்தார்.

1970 களில் தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணியில் இளைஞர் பிரிவுகளில் தீவிரமான செயற்பாட்டாளராக இருந்தவர். 1970 களில் கூட்டணியின் அரசியல் எதிரிகளைக் கொல்லத் தொடங்கிய தனிமனித பயங்கரவாதத்துடன் நெருக்கமான தொடர்புகள், பங்குபற்றல்களை கொண்டிருந்தவர். இந்த தனிமனித பயங்கரவாத அரசியலுடன், அவர் என்றும் முரண்பட்டது கிடையாது. 'கொலைகளை நிறுத்துங்கடா" என்ற அவரின் இறுதி மரணச் செய்திலும் கூட, தனிமனித பயங்கரவாத அரசியலை நியாயப்படுத்தி விட்டே சென்றவர். அவர் தனது கடந்தகால செயற்பாட்டை பெருமையாக முன்னிலைப்படுத்தியவர். மரணம் வரை அதைப் பீற்றியவர்.

அவரின் கடந்தகால தனிமனித பயங்கரவாத செயல்களும், பேரினவாதத்துக்கு எதிரான போராட்டங்களும் அவரை சிறிலங்காவின் சிறைக்கு இட்டுச் சென்றது. இதனால் பலத்த சித்திரவதைகளை பலமுறை சந்தித்தவர். அவரின் குடும்பமே பேரினவாதிகளின் சித்திரவதைகளை தொடர்ச்சியாக சந்தித்தது. அக்காலத்தில் புஸ்பராஜாவும் அவர் குடும்பமும் சிறிலங்காவின் கொடூரங்களுக்கு ஒரு எடுத்துகாட்டான அடையாளமாக, பலரும் அறியக் கூடிய ஒன்றாகவும் இருந்தது. இதைச் சொல்லியே புலிகள் இயக்கம் முதல் பல இயக்கங்களும் அரசியல் செய்தனர்.

அன்று புஸ்பராஜா மரணித்து இருந்தால், சிவகுமாருக்கு கிடைத்த அதே அந்தஸ்து கிடைத்து இருக்கும். ஆனால் அந்த அதிஸ்ட்டம் அவருக்கு கிடைக்கவில்லை. 1982 களில் பிரான்ஸ் வந்தபின், இவரின் இரண்டாவது அரசியல் காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்யுடன் இணைந்த பின் தொடங்கியது.

இங்கும் இந்திய ஆக்கிரமிப்புக்கு முன் பின் என்று இரண்டு காலகட்டத்திலும் அவரின் அரசியல் பாத்திரம் உண்டு. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சென்ற கப்பலில் சென்ற போதும் சரி, பின்பு ஆக்கிரமிப்பாளனின் கெலியில் மக்களின் மேலாக பறந்து திரிந்த போதும் சரி, இந்திய இராணுவ பாதுகாப்பில் கூலி இராணுவ முகாமில் தங்கி இருந்த போதும் சரி, இவர் கொல்லப்பட்டு இருந்தால் அதன் விளைவு எப்படிப்பட்டதாக இருந்து இருக்கும்;.

இவரின் பொதுவாழ்வில் மரணத்தின் தளம், மரணத்தின் இடம் எல்லாம் மாறிக் கொண்டே இருந்தது. நேர்மையான மக்கள் அரசியலை முன்னெடுக்காத வரை, மரணம் கூட அவர்களின் அரசியலை நியாயப்படுத்திவிடாது. இப்படி பல்வேறு வழிகளில் புஸ்பராஜா பயணித்த நிலையில், இந்த வரலாற்றை சரியானதாக காட்டுவது அந்தப் பாதையில் செல்ல முனைவது முனைப்புக் கொள்வது கடும் விமர்சனத்துக்குரியது.

தமிழ் மக்கள் என்ற பெயரில் நடத்திய அனைத்து அரசியல் கூத்தும், மக்களின் வாழ்வுடன் தொடர்பற்றவையாக இருந்தது. அதிலும் வலதுசாரியத்தை அடிப்படையாக கொண்டது. இது இயல்பாக மக்கள் விரோத அடிப்படையில் பாசிசத்தை தனது அரசியல் சித்தாந்தமாக வரிந்து கொண்டது. இதில் புஸ்பராஜா பங்கு கொண்டதுடன், அதை என்றும் சுயவிமர்சனம் செய்தவரல்ல. மாறாக கடைசி வரையும் அதை பெருமையாக காட்டி நியாப்படுத்தியவர். அவரின் நூல் அதையே செய்ய முனைகின்றது.

தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலுடன் சங்கமித்து இருந்த புஸ்பராஜாவின் அரசியல், படுபிற்போக்கான யாழ் மேலாதிக்க குறுந்தேசியவாதம் தான். அனைத்து சமூக ஒழுக்குமுறையையும் களைவதற்கு எதிரான ஒரு குறந்தேசிய அரசியல் தான். இதை அவர் கடைசிக்காலம் வரை கூட மாற்றியது கிடையாது. தனது கடைசிக்காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு நடத்திய அஞ்சலிக் கூட்டம் முதல் தொண்டமானுக்கு நடத்திய அஞ்சலிக் கூட்டம் வரை, இதற்கு சிறந்த சான்று பகிர்கின்றது.

கூட்டணியின் தமிழ் தேசிய அரசியல் என்பது, 1940 முதலே இனவாதத்தை அடிப்படையாக கொண்டது. தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பெயரில் ஏமாற்றி, அவர்களின் வாழ்வை சூறையாடுவதை அடிப்படையாக கொண்டது. சிங்களப் பேரினவாதத்தைக் காட்டி அதில் தமது சொந்த குறுந்தேசிய வாதத்தைக் கட்டமைத்தனர். உண்மையில் சிங்கள பேரினவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் எதைச் செய்தனரோ, அதைத்தான் தமிழ் தேசியத்தின் பெயரில் குறுந்தேசியவாதிகள் செய்தனர். கூட்டணியின் மிகச் சிறந்த ஆயதமேந்திய பிரதிநிதிகள் தான் புலிகள். கூட்டணியின் அரசியலுக்கு வெளியில் புலிகளுக்கு என்ற தனித்துவமான அரசியல் கிடையாது. கொலைகள் பற்றிய கண்ணோட்டத்திலும் கூட.

கூட்டணியின் அரசியல் என்பது யாழ் மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. உயர்சாதியத்தை அடிப்படையாக கொண்டது. ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. தமிழ் தரகு முதலாளிகளின் ஏக பிரதிநிதிகளாகவும், தமிழ் நிலப்பிரபுத்துவத்தின் ஏக பிரதிநிதிகளாக தம்மை வெளிப்படுத்தி, அதற்காக தமிழ்மக்களை அடிமைப்படுத்தியவாகள். இப்படி சமூகத்தின் சகல அவலத்தினையும் பாதுகாக்கும், வலதுசாரி கூட்டணி அரசியலில் தான், புஸ்பராஜா தன்னை நிலைநிறுத்தியவர். அவரின் மரணம் வரை அதையே புலிகள் விதிவிலக்கின்றி தமது கோட்பாட்டு நீட்சியாக பேணியவர்.

அன்று முதல் இன்று வரை கூட்டணி அரசியல் இடது எதிர்ப்பை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. அன்று தமது அரசியலுக்கு போட்டியாளராக இருந்தவர்களை துரோகிகளாக காட்டி படுகொலை செய்வித்தவர்கள். பிரபாகரன் கூட அப்படி அமிர்தலிங்கத்தால் வளர்க்கப்பட்டவர். தனிமனித பயங்கரவாத அரசியல் எடுபிடியாகத் தான் இவர்கள் வாலட்டியவர்கள். இந்த கூட்டணியின் தொடர்ச்சியான அரசியலில் புஸ்பராஜா விசுவாசமாக அதற்காகவே கடைசி வரையும் குலைத்தவர். "கொலைகளை நிறுத்துங்கடா" என்று சொன்னவர், கடந்தகாலத்தில் அதாவது கூட்டணி காலத்தில் நடந்த இதே போன்ற அரசியல் கொலைகளை அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதை அவர் தனது சொந்த நூலில் நியாயப்படுத்தியுள்ளார்.

புஸ்பராஜா தமிழரசுக் கட்சியுடன் தொடர்பு கொண்ட காலத்தில் தான், சாதியத்துக்கு எதிரான போராட்டம் யாழ் மண்ணில் வீறு கொண்டிருந்தது. உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் கூட நடைபெற்றது. பேரினவாதத்துக்கு எதிரான போரட்டங்களும் கூட, இடதுசாரி கண்ணோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதைக் கூட்டணி தெளிவாகவும் துல்லியமாகவும் எதிர்த்தது. பேரினவாதத்துடன் இந்த விடையத்தில் கூட்டுச் சேர்ந்து இடதுகளை ஒழித்துக்கட்ட போராடியது. தீவிர குறுந்தேசியத்தை மாற்றாக முன்வைத்தது.

ஒடுக்கப்பட்ட ஒரு சாதியில் இருந்து வந்த புஸ்பராஜா, தீவிர இடது எதிர்ப்பு கொண்ட வலதுசாரிய உயர்சாதிய கட்சியில் இணைந்து கொண்டது மட்டுமல்ல, அதை தனது மரணம் வரை நியாயப்படுத்தியதை நாம் எப்படி இன்று நியாயப்படுத்த முடியும். புஸ்பராஜா இந்தக் குறுந்தேசிய, யாழ் மேலாதிக்க, உயர்சாதிய, ஆணாதிக்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தனது கடந்தகால வரலாற்றை, அவர் என்றுமே சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இறுதி வரை அதை பாதுகாக்கும் அரசியலையும், அரசியல் நடத்தைகளிலும் ஈடுபட்டவர். அதை காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வலதுசாரிய அரசியல் வழியில் நியாயப்படுத்தியவர். உதாரணமாக பெண்ணிய நோக்கிலும் கூட நியாயப்படுத்த முனைந்தவர். பெண்களை தாம் இயக்கத்தில் இணைத்ததாக கூறுவதை பெண்ணியம் என்கின்றார். புலிகளும் தான் பெண்களை இயக்கத்தில் இணைக்கின்றனர். இது பெண்ணியமா?

தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டின் பின்பு ஏற்பட்ட பிளவும், மீண்டும் கூட்டணிக்கு வரும் மீள் பிளவிலும் கூட, பிற்போக்கான அரசியல் தேர்வையே செய்தவர். இதன் பின்பாக கூட்டணி அரசியலில் சிதைந்து சிதறிய ஒரு நிலையில் உதிரியாகின்றார். இதன் பின்பாக தனிப்பட்ட நலன், குழு நலன் அடிப்படையில் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் இணைந்தவர். ஈ.பி.ஆர்.எல்.எவ் உலகத்தை ஒற்றை ஏகாதிபத்தியமாக வகைப்படுத்தி, சோவியத் என்ற சமூக ஏகாதிபத்தியத்தை சோசலிச நாடாக காட்டி, இந்திய கைக்கூலிகளாகவே அவ்வியக்கம் கட்டமைக்கப்பட்டது. வர்க்கம் என்பது அவர்களுக்கு வெறும் சொல்லலங்காரம் மட்டும் தான். சாதியம் என்பது ஆளெடுக்கும் ஒரு சாதிய விளைநிலம் தான். சாதியப் போராட்டம் நடந்த மண்ணில், இந்த இயக்கம் தொடர்ச்சியான எந்த சாதிப் போராட்டத்தையும் திட்டமிட்டு முன்னெடுக்கவில்லை.

உண்மையில் யாழ் மேலாதிக்க இயக்கமாகவே அது உருவானது. சிந்தனையும் செயலும் அப்படித் தான் இருந்தது. இதற்கு எதிராக செழியன்-தாஸ் தலைமையிலான உள்முரண்பாடு கூர்மை அடைந்து இருந்தது. இன்று புலியின் பின்னால் வாலாட்டி நிற்கும் பிரேமச்சந்திரன் தான், அந்த இயக்கத்தின் உண்மையான தலைவன். பத்மநாபா அந்த இயக்கத்தின், வெறுமனே மனிதாபிமானம் கொண்ட ஒரு பொம்மை. மாறாக பிரேமச்சந்திரன் இந்தியாவின் நேரடியான கைக்கூலி. இந்த இயக்கத்தை புலிகள் தடைசெய்து படுகொலைகளை நடத்தியதன் பின்பாக, இந்தியக் கைக்கூலித்தனமே ஆளுமை பெற்று அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாறியது. மற்றைய போக்குகளை அவ்வியக்கம் அனுமதிக்கவில்லை.

இந்திய ஆக்கிரமிப்பின் போது ஒரு கூலிப்பட்டாளமாகவே அது செயற்பட்டது. இதன் போது புஸ்பராஜா எப்படி செயற்பட்டார். இந்தியக் கைக் கூலியாக, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கூலி இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினார். ஆக்கிரமிப்பாளனின் துணையுடன் வடக்கு கிழக்கு மண்ணில் பவனி வந்தவர். இந்திய கெலிகளிலும், இந்திய இராணுவ வாகனங்களிலும், இந்திய போர்க் கப்பலிலும் தமிழ் மக்களை சுற்றியும் மேலாகவும் ஊடறுத்தும் திரிந்தவர். இப்படி தான் இவரின் வலதுசாரிய அரசியல் இயல்பாகவே இழிவான சமூக பாத்திரத்தை வகித்தது.


ஈ.பி.ஆர்.எல்.எவ் சமூகத்தில் இழிந்து சிதைந்து போகும் வரை, அதில் ஒட்டிக் கொண்டிருந்தவர். இதன் பின்னால் புலியெதிர்ப்பு அணி, புலம்பெயர் இலக்கியத்துடன் ஒட்டிக் கொள்ளத் தொடங்கியவர்.

அதிகாரமற்ற ஒரு நிலையில், வக்கற்றுப் போனவர்களின் நிலையையே தனது வாழ்வாக கொண்டிருந்தார். இது உருவாக்கும் வக்கற்ற புலம்பல்களே, இலக்கியமாகவும் அரசியலாகவும் வெளிப்பட்டது. சமூகத்துக்கு என வழிகாட்ட வக்கற்றுப் போனார்கள். இதை அவர் தனது இறுதிப் பேட்டியில் தெளிவாகவே, மக்களுக்கு எனச் சொல்ல தன்னிடம் எதுவும் இல்லை என்கின்றார். மாறாக தம்மை மிதப்பாக காட்டுவதன் மூலம், சமூகத்தில் ஒரு இடம் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்பில் அங்கும் இங்குமாகவே ஒடித் திரிந்தவர். எல்லாருடனும் சிரித்துக் கதைத்து தன்னைத்தான் நடுநிலையாளனாக காட்டிக் கொள்ள முனைந்தவர்.


புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டியது


போக்கிடமற்றவர்களின் தங்குமிடமாக புலியெதிர்ப்பு மூகமுடி எப்போதும் உதவி வந்தது. இது புஸ்பராஜாவுக்கும் விதிவிலக்கல்ல. புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டிக் கொண்டதன் மூலமே, தனது இறுதி காலத்தை அரசியலுக்குள் ஒட்டியவர். அங்கும் அவர் புலியுடன் இணங்கிக் கொள்ளும் வகையில், ஒரு வலதுசாரிய நடுநிலை போக்கை அங்குமிங்குமாக கையாண்டவர். புலிகளின் சில நடத்தைகளை மட்டும் எதிர்த்தவர், அவர்களின் சமூக பொருளாதார குறுந்தேசிய அரசியலை சரியென்று கூறியவர். இதுதான் அவரின் கடந்தகால தேசிய அரசியலாக இருந்தது. இது இயல்பில் புலிகளுடன் முரண்படாத வகையில், தன்னைத்தான் நியாயப்படுத்திக் கொள்ளவே உதவியது. அனைத்து தரப்பிடமும் இருந்து, தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற தீவிரமாக முனைந்தவர். இது தான் அவரின் இறுதிகால அரசியல் முயற்சியாக இருந்தது.

மக்கள் அரசியலைக் கைவிட்ட புலியெதிர்ப்பு என்பது 1990 களில் ஒரு அரசியல் போக்காகவே தொடங்கியது. புலிகள் அல்லாத அனைவரையும் படுகொலைகள் மூலம் அழித்த புலிகள், தாம் அல்லாத அனைத்தையும் எதிரியாக முத்திரை குத்தினர். இந்த நிலையில் மற்றவர்கள் அனைவரையும் ஒரு அணியாக புலிகளே அடையாளம் காட்டத் தொடங்கினர். துரோகி என்று பொதுவாக புலிகள் இட்ட அடையாளமே, புலியெதிர்ப்பு அணியாக அவர்களையே ஒரு கும்பலாக ஒருங்கிணைத்தது.

இந்த புலியெதிர்ப்பு கும்பல் அரசியல், தனித்துவமான தமது சொந்தக் கருத்துகளை படிப்படியாக இழந்து இழிந்து போனது. புலிக்கு எதிரான அனைத்தும், இந்தக் கும்பலின் கருத்து என்ற உள்ளடகத்திலேயே இந்தப் போக்கு அரசியலாக வளர்ச்சியுற்றது. இதற்குள் முரண்பாடு என்றால், தனிநபர் ஈகோ முரண்பாடுகள் மட்டும்தான் இதற்குள் எஞ்சியது. புலிகள் தாம் அல்லாதவர்களை ஒன்றாக்கி அவர்களையே இழிவுபடுத்தியது போது, அவர்கள் அந்த இழிவை விசுவாசமாக ஏற்றுக் கொண்;டு முதலில் செய்தது தமது சொந்தக் கருத்துக்களை இழந்தது தான். இழிந்து அரசியல் ரீதியான சீரழிந்து, மக்களை எதிரியாக பார்க்கின்ற ஒரு அரசியல் உணர்வாக அது வளர்ச்சியுற்றது. இதுவே புலிகளை மேலும் மக்களுக்கு எதிராகப் பலப்படுத்தியது. மக்களுக்கு எதிராக இரண்டு வலதுசாரிய அணிகள், எதிர்நிலையில் ஒன்றையொன்று எதிர்த்தபடி உருவானது.

இரண்டும் புலிகள் சமன் மக்கள் என்ற கோட்பாட்டை உயர்த்தினர். மக்களின் நியாயமான கோரிக்கைகளை புலியின் கோரிக்கையாக காண்பது இதன் அரசியலாகியது. இதை புலிகள் தாம் செய்தனர் என்றால், புலியெதிர்ப்பணியும் இதையே செய்து, அனைத்தையும் புலியாகக் கண்டது. இது இயல்பில் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையையே மறுக்கத் தொடங்கியது. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் முரணற்றவகையில் ஒழிப்பது தான் ஜனநாயகக் கோரிக்கை. இதைப் புரிந்து கொள்ளாது, புரிந்துகொள்ள முனையாது, மக்களின் கோரிக்கையை புலிகள் கொண்டுள்ளதாக கருதிய புலிகளும், புலியெதிர்ப்பு கண்ணோட்டமும் இயல்பாக, தமது சொந்த தவறான முடிவுகளால் இயல்பில் மக்களுக்கு எதிராகவே மாறின. சிலர் அங்கும் இங்குமாக தமது சொந்த வலதுசாரிக் கருத்துகளை இவ் இரண்டுக்குள்ளும் தேடினர். இந்த வகையில் புஸ்பராஜாவும் ஒருவர்.

கும்பலாக ஒருங்கிணைந்த புலியெதிர்ப்பு அணி, தன்னை வலது இடது கலந்த ஒன்றாக காட்டியபடியே இடது அரசியலையே களைந்து கைவிட்டது. மாறாக வலது அரசியலையே முதன்மைப்படுத்தியது. இதன் வளர்ச்சி ஏகாதிபத்திய புலியெதிர்ப்பையும், சிறிலங்காவின் புலியெதிர்ப்பையும், இந்தியாவின் பிராந்திய புலியெதிர்ப்பையும் கூட தனக்குள் சுவீகரித்துக் கொண்டது. இது இயல்பாக புலிக்கு எதிரான அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாகக் கூடி கும்மாளம் அடிக்கும் ஒரு அரசியல் களமாக மாறியது. இவர்களிடத்தில் மக்களுக்கு வழிகாட்ட சொந்த அரசியல் என எதுவும் எஞ்சியிருக்கவில்லை. புலிக்கு எதிரான அரசுகளின் அரசியல் பொருளாதார நிலைப்பாட்டையும், கூலித்தனத்தையுமே புலியெதிர்ப்பு அரசியலாக கொண்டு வளர்ச்சியுற்றது. இது கடந்து வந்த காலம் முழுக்க படிப்படியாக முன்னேறி, இன்று தீவிர புலியெதிர்ப்பு வாந்தியாக பேந்துவிடுகின்றனர். இதில் இருந்த சில பிரிவுகள் அல்லது தனிப்பட்டவர்கள் முரண்பட்டு வெளியேறுகின்றனர். தம்மை தனித்துவமாக அடையாளம் காட்ட விரும்பிய போதும், அவர்களும் இந்த வட்டத்துடன் மிக நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்படுகின்றனர் என்பதே துரதிஸ்ட்டமானது.

மக்கள் நலன்களை உயர்த்தி, அதைக் கோட்பாட்டு ரீதியாகவே மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல் அற்பத்தனத்தின் மொத்த விளைவு இது. மக்களுக்கு என்று சொல்வதற்கு எதுவுமற்றவர்களின் கதம்பமாக, இது சீரழிந்த வண்ணம் உள்ளது. புஸ்பராஜா தனது வலதுசாரிய அரசியலுடன் இதற்குள் வலுவாக குந்தியிருக்கவே முனைந்தவர். மக்கள் நலன் எதையும் முன்வைக்கவோ, அதைக் கோரவோ முனையவில்லை. மக்களுக்கு எதிரான பொது அரசியல் போக்கை அம்பலப்படுத்த முனையவில்லை. மாறாக மக்கள் விரோத கும்பலாகவே குந்தியிருந்தபடி, புலியுடன் தனது வலதுசாரிய அரசியலூடாக பாசக்கயிற்றை அங்கு எறிந்தவர். தனது மரணத்துக்கு முந்திய இறுதிப் பேட்டியில் புலியிடம் வேண்டுகோள் விடுக்க முனைந்தவரே ஒழிய, மக்களுக்கு சொல்ல எதுவும் தம்மிடம் இல்லையென்றவர். உண்மையில் வலதுசாரிய அரசியலிடம் மக்களுக்கு சொல்லவென எதுவும் இருப்பதில்லை.

இந்த புலியெதிர்ப்பு அணியின் முன்முயற்சியின் ஒருபகுதி தான் இலக்கிய சந்திப்பு. இலக்கிய சந்திப்பின் தொடக்கம், இடதுசாரிய நிலைப்பாட்டுடன், மக்களுக்கு வழிகாட்டும் முனைப்புடன் உருவாக்கப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியாக தெளிவற்ற, மக்களுக்கு வழிகாட்ட வக்கற்ற சஞ்சிகைளும், இலக்கியவாதிகளும் படிப்படியாக தமது சொந்த இடது நிலைப்பாட்டை கைவிட்டு வலதுசாரியாக மாறிவந்த நிலையில், வலதுசாரிகளின் ஆதிக்கத்தில் இந்த சந்திப்பும் அரசியல் ரீதியாக சிதைந்து போனது. மாறாக தமது அரசியல் அரிப்புகளை பேசுமிடமாக, தனிபட்ட நபர்களின் அற்பத்தனங்களை தீர்க்கும் இடமாக மாறி, சந்திப்பு ஒரு சுற்றுலாவாக பொழுதுபோக்காக மாறியது. இங்கு மக்களுக்காக எதையும் கூறுவதுமில்லை, பேசுவதுமில்லை.

தன்னார்வக் குழுக்களிடம் பணம் வாங்கி நக்குபவர்களும், இடதுசாரி சித்தாந்தத்தை கைவிட்டு அதை வீம்புக்கு அலட்டிக் கொண்டு அரசியலில் வாழ்பவர்கள் என பலரும், படிப்படியாக வலதுசாரியக் கோட்பாட்டின் உள்ளடகத்தில் இணங்கி இசைந்த சந்திப்பாக சிதைந்து, உருக்குலைந்து சமூகத்துக்கே நஞ்சிடுகின்றனர். புலியெதிர்ப்புக் கவசத்துடன் புலம்பெயர் இலக்கியம் என்ற கவர்ச்சியுடன் படுபிற்போகான வலதுசாரிய நிலைக்குள் இலக்கியச் சந்திப்பு செயல்வடிவம் பெற்று அது செய்தது எல்லாம், இடது போக்கை இழிவுபடுத்தி புறக்கணித்தது தான். புலியின், ஏன் கடந்தகால குறுந் தேசியவிடுதலைப் போராட்டத்தின் வலதுசாரிய அரசியலை, அது என்றுமே கேள்விக்குள்ளாக்கியது கிடையாது. மாறாக வலதுசாரிய அரசியலில், தமது கால்களை ஆழப்புதைத்துக் கொண்டனர். புஸ்பராஜா போன்றவர்கள் இயல்பாகவே இதனுடன் ஓட்டிக் கொண்டனர்.

மறுபக்கத்தில் புலம்பெயர் இலக்கிய சந்திப்பு எதையும் சொந்தமாக செய்ய வக்கற்றுப் போனது. இந்த இலக்கியத்தின் சிதைவையும், அதன் இயலாத் தன்மையையும் நாம் காண்கின்றோம். இதற்கு வெளியில் தான் ஒருசில இலக்கியங்கள் வெளிவந்தன, வெளி வருகின்றன. இலக்கிய சந்திப்பின் கொள்கை கோட்பாட்டுக்கு வெளியில் தான் இவை கூட உருவாகின்றது.

இந்த இலக்கிய சந்திப்பு தனது வலதுசாரிய அரசியலால் சிதைந்து சின்னாபின்னமாகி வந்த நிலையில், அதைச் சரிக்கட்டவே, பின்நவீனத்துவம் தலித்தியம் என்று பல பெயர் கொண்ட கோட்பாடுகளை பெயருக்கு அதில் புகுத்தினர். இப்புதிய வடிவங்கள் செயற்கையாகவே உள்ளடகத்தில் அல்லாது அதில் பிரதிபலித்தது. இந்தியாவின் பிரதிபலிப்பாகவே இப்போக்கு இங்கும் பிரதிபலித்தது. இந்தியாவில் சிதைந்து சீரழிந்த போது, இங்கும் அது மூச்சுத்திணறி செத்துப் போனது.

இதன் போதும் புஸ்பராஜா தனத வலதுசாரிய அரசியலைக் கைவிடாது அதன் பிரதிநிதியாக தன்னை காட்டிக் கொள்ள வலிந்து முனைந்தார். ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து வந்தவர் என்ற அடையாளத்துடன், செயற்கையாகவே தனது வலதுசாரிய நிலையில் நின்று அதைப்பற்றி எழுதவெளிக்கிட்டவர். ஆனால் அதில் அவர் ஒட்டிக்கொள்ள முடியவில்லை. தனது வலதுசாரிய நிலைக்கு ஏற்ப சாதியத்தை மேய்ந்தார். இதுவே தனக்கு ஒரு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுத் தரும் என்று நம்பினார். ஆனால் சாதியத்தின் சமூகக் கூறுகளைக் கொண்டு, கடந்த காலத்தில் தான் பின்பற்றிய வலதுசாரிய அரசியல் முன்னிறுத்திய சாதிய ஒடுக்குமுறை மீதான விமர்சனத்தை அவர் முன்னெடுக்கவில்லை. தனது சொந்த நூலில் பின்நவீனத்துவ தலித்திய நோக்கில் நின்று, கடந்த காலத்தையும் தனது செயற்பாட்டையும் கூட அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதை நியாயப்படுத்தியபடி, தன்னைத்தான் தலித் என்றார். ஒரு வலதுசாரியின் அரசியல் இப்படித்தான் என்பதையே, அவர் நிறுவிக்காட்டினார். சாதியம் பற்றிய தரவுகளை தொகுப்பதன் மூலம், தலித் என்ற பெயரில் தங்கிநின்று மற்றவனை திட்டுவதன் மூலம், சாதிய போராட்டத்தில் தானும் பங்காளி என்று காட்டவே முனைந்தவர். ஆனால் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற அவரின் நூலில், அவர் தன்னை ஒரு வலதுசாரிய உயர்சாதிய பிரதிநிதியாகவே வெளிப்படுத்தி நிற்கின்றார். அவரின் கடந்தகாலச் செயற்பாடுகள், யாழ் மேலாதிக்க உயர்சாதிய ஆணாதிக்க சுரண்டும் வர்க்கத்தின் குறுந்தேசியமாகவே இருந்தது. இதை அவர் தனது மரணம் வரை நியாயப்படுத்தியவர். இது தான் அவரின் அரசியல்.


'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற நூல் மூலம் சேடம் கட்ட முடியுமா?


நூல் பற்றிய முழுமையான விமர்சனத்துக்கு என எடுத்த எனது குறிப்புகள், என் முன் இருந்த போதும், நேரம் இன்மையால் அதை எழுதமுடியவில்லை. இருந்த போதும் அவரின் மரணத்தை இந்த நூலின் மூலம் அரசியலாக்க முனையும் நிலையில், இந்த நூல் பற்றி எனது குறிப்பான விமர்சனம் தான் இது.

நான் முன்பே எழுதியது போல், இந்த நூல் சொல்ல முனைவது பிரபாகரன் இடத்தில் நான் இருக்கவேண்டியவன் என்ற வலதுசாரிய அங்கலாய்ப்புடன் தனது சொந்த நலனை முன்னிறுத்தி தொகுக்கப்பட்டுள்ளது. (நூல் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கமும் அடங்கும்.) அதற்கேயுரிய தகவல்கள், எல்லாம் தானாக இருந்ததாக காட்ட முனையும் போக்கு, இடது வெறுப்புடன் கூடிய வன்மம் மிக்க கண்ணோட்டம், மக்களின் அரசியல் போராட்டத்தை வெறுக்கும் அரசியல் போக்கு புலிகளிடம் மண்டியிட்ட வேண்டுகோளாக மாறுகின்றது. மக்கள் மீதான நம்பிக்கையை, மக்களே வரலாற்றை தீர்மானிப்பவர்கள் என்ற உண்மையை எங்கும் எதிலும் அவரிடம் காணமுடியாது.

இந்த நூல் பல தவறான தகவல்களையும், திரித்த தகவல்களையும் கூட வழங்குகின்றது. தன்னை முன்னிலைப்படுத்தி, தனது வலதுசாரிய அரசியலை முதன்மைப்படுத்தி, குறுந்தேசிய வரலாற்றை நியாயப்படுத்தி வெளிவந்தது. திட்டமிட்ட வகையில் இடதுசாரிப் போராட்டத்தையே முற்றாக இருட்டடிப்பு செய்து இந்த நூல் செய்தது. வலதுசாரியத்துடன் ஏற்பட்ட இடது முரண்பாடுகளைக் கூட, புலிப்பாணியல் எதிராக காட்டுவது, இந்த நூலின் அரசியல் சாரமாகும். பிரபாகரன் தனது வலதுசாரிய அரசியல் பார்வையில் தாம் தூய்மையானவர்கள் என்று எப்படி ஒரு போலியான கட்டமைப்பை உருவாக்கினரோ, அதையே புஸ்பராஜாவும் செய்து தன்னைத்தான் முன்னிலைப்படுத்த முனைகின்றார்.

அக்காலத்தில் மக்கள் பற்றி தனது சொந்த நிலைப்பாட்டை அவர், புலிப் பாணியில், எல்லாம் தாமாக தமது அரசியலாக காட்டுகின்றார். புலிகளின் வலதுசாரிய பாசிச அரசியலையே, புஸ்பராஜா அப்படியே பிரதிபலிக்கின்றார். தனது ஒடுக்கப்பட்ட சாதிய முரண்பாடுகளைக் கூட அவரால் கண்திறந்து பார்க்க முடியாத அன்றைய நிலையில், அப்படியே இன்று விமர்சனமின்றி ஒப்புவிக்கின்றார். சுயவிமர்சனம், விமர்சனம் என்பது அறவே கிடையாத ஒரு வலதுசாரிய கண்ணோட்டம் கொப்பளிக்கின்றது.

மிக அப்பட்டமான துரோகம் என்னவென்றால் அக்காலத்தில் நடந்த மக்கள் போராட்டங்களை மறுதலிப்பதன் மூலம், அதை இருட்டடிப்பு செய்கின்றார். மேல்சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், குறுந்தேசிய இயக்கத்துக்கு எதிரான அடிநிலை சாதிகளின் போராட்டம், இயக்கத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்கள், குறுந்தேசிய ஆணாதிக்கத்துக்கு எதிரான பொதுப் போராட்டங்கள் என எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. கூட்டணிக்கு எதிரான போராட்டங்கள், வலதுசாரிய அரசியலுக்கு எதிரான போராட்டங்கள் என பல, அவரால் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. வலதுசாரிய தனிமனித பயங்கரவாதங்கள் நியாயப்படுத்தப்பட்டு, கதாநாயகர்கள் பற்றி பிரமையூட்டி அவ் வலதுசாரிய அரசியல் போற்றப்படுகினற்து. இவர் பதிய மறுத்த பல போராட்டங்கள் பலரும் அறியும் போராட்டமாக இருந்தது. சில புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைளில் பதிவாகியும் உள்ளது.

இது ஒருபுறம். மறுபக்கத்தில் அவர் சார்ந்து இருந்த அரசியல் போக்குக்கு எதிரான மக்கள் போராட்டங்களை, மிகவும் திட்டமிட்டு மறைக்கின்றார். சொன்னவைகளை தனது வலதுசாரிய நிலைக்கு ஏற்ப, இன்றும் கூட திட்டமிட்டு திரித்து காட்டுகின்றார். எல்லாவற்றையும் வலதுசாரிய அரசியலுக்குள், கறைபடியாத ஒன்றாக நிறுவிக்காட்ட முனைகின்றார். இந்த குறுந்தேசிய வலதுசாரிய அரசியல் சரியானதாக சித்தரிக்க முனைகின்றார்.

நான் சோபாசக்தியின் 'ம்" நாவல் விமர்சனக் கூட்டத்தில் வைத்து சுட்டிக் காட்டியபடி, 'ம்" நாவலின் பல உண்மை சம்பவங்களுடன் முரண்பட்டவற்றை புஸ்பராஜா நூல் கொண்டிருந்தது. அங்கு பிரசன்னமாகியிருந்த புஸ்பராஜா, பின் இது பற்றி என்னுடன் கதைத்த போது, தனது வலதுசாரி கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தியபடி தவறுகள் உண்டு என்றார். தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை தவிர்க்கும் நோக்கில், தனிப்பட எனக்கு கூறப்பட்டது தான்.

உதாரணமாக ஊர்காவற்துறை இன்ஸ்பெக்டர் பற்றிய அபிப்பிராயத்தில், அது அப்படித்தான் இருந்தது என்கின்றார். அந்த இன்ஸ்பெக்டர் பற்றிய மதிப்பீட்டில் சோபாசக்தியின் உண்மை பாத்திரம் சரியாகவே இனம் காண்கின்றது. புஸ்பராஜாவின் பாத்திரம் பிழையாக வலதுசாரிய நோக்கில் இனம் காண்கின்றது. எதிரியை பிழையாக அடையாளம் காட்டி நண்பனாக்குகின்றது. நண்பனை எதிரியாக்குகின்றது. இது குறுந்தேசிய புலி அரசியல் இப்படித் தான் சமூகத்தை வகைப்படுத்தி அழித்தொழிக்கின்றது. ஒருவன் பற்றிய உண்மை மதிப்பீட்டை அரசியலுக்கு அப்பால் இட்டுச் சென்று, தனிமனித நோக்கில் அணுகிவிடும் வலதுசாரிய மதிப்பீடுகளே இவை, மனிதவிரோத இன்ஸ்பெக்டரை குறுந் தேசியத்துக்கு ஆதரவானவராக காட்டுகின்றது. இது எமது குறுந்தேசிய போராட்டம் முழுக்க காணப்படுகின்றது. எதிரி நண்பன் பற்றிய மதீப்பீட்டையே இது முற்றாக எதிர்நிலைத்தன்மை கொண்டதாக அணுகிவிடுகின்றது. இதன் விளைவையே நாம் இன்று ஒரு சமூகமாகவே அனுபவிக்கின்றோம்.

இதுபோல் பல நூறு விடையங்களை இப்படி பார்க்க முடியும். சந்ததியார் பற்றிய புஸ்பராஜவின் மதிப்பீடும் இப்படித்தான். பாலசிங்கத்தின் 'போரும் சமாதானமும்" நூல் போல், புலிகள் அல்லாத மற்றொரு வலதுசாரிய அரசியலை வெளிக்கொண்டு வருகின்றது. உதாரணமாக பிரபாகரன் மாத்தையா என்ற இரண்டு வலதுசாரிகள் வரலாற்றை எழுதினால், அல்லது கருணா பிரபாகரன் என்ற இரண்டுபேரின் வரலாற்றை எழுதினால் நிச்சயமாக முரண்பட்ட இரண்டு வரலாறு இருக்கும். அதைபோல் தான் புஸ்பராஜா தனது வலதுசாரிய அரசியல் பாத்திரத்தை நியாயப்படுத்தி எழுதுகின்றார். இங்கு மக்கள் பற்றியோ, அவர்களின் அரசியல் கோரிக்கையைப்பற்றியோ, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுகளின் பிரத்தியேகமான சிறப்பான கோரிக்கை பற்றியோ, இயக்க கண்ணோட்டங்களைப்பற்றியோ அல்ல. மாறாக தன்னை முதன்மைப்படுத்தி, அந்த வலதுசாரிய மக்கள் விரோத நடத்தையை தமிழ் மக்களின் தலைக்கு மேல் வைக்க முனைகின்றார். கடந்தகால வலதுசாரிய மொத்த மக்கள் விரோத அரசியலையும் நியாயப்படுத்துகின்றார்.

இங்கு புலியல்லாத பிரிவினால் புத்தகம் நிராகரிக்க முடியாத ஒன்றாகவும், பலரும் வியந்து பார்க்கும் வண்ணம் எது மாற்றுகின்றது. மக்களுக்கு எதையும் வழிகாட்ட முடியாத ஆளுமையற்ற சமூக இருப்பில், தம்மைத்தாம் தக்கவைக்க முனைகின்ற போது ஏற்படும் அதிர்வே இப்படி பிரதிபலிக்கின்றது. இந்த அரசியலுக்கு வெளியில் நூல் பலரும் இலகுவாக தெரிந்து கொள்ள முடியாத, பல சம்பவங்களை தொகுத்தளிக்கின்றது. இவற்றில் பல தவறுகள் இருந்த போதும் கூட, பல திட்டமிட்டு விடப்பட்டு இருந்த போதும் கூட, தனிப்பட்ட நபர்கள் பற்றி மிகைப்படுத்தியும் கொச்சைப்படுத்திய போதும் கூட, அது கொண்டுள்ள தரவுகள் சார்ந்து நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. இதேபோல் தான் அன்ரன் பாலசிங்கத்தின் 'போரும் சமாதானமும்" என்ற நூல் பழைய பேச்சுவார்த்தையில் என்ன நடத்தது என்ற சில ஆவணக்கடிதங்களை முதன் முதலில் வெளிக் கொண்டுவந்துள்ளது. சமூகத்தையும் அக்காலத்தையும் திரும்பி பார்க்க இது உதவுவது போல், புஸ்பராஜாவின் நூலும் உதவுகின்றது அவ்வளவுதான். இதற்கு வெளியில் மக்கள் நலன் சார்ந்து பார்த்தால், இந்த நூல் அரசியல் ரீதியாகவே பயனற்றது. மக்களை வெறும் பொம்மையாக்கி இழிவாக்குகின்றது.

இதை கவனத்தில் கொள்ளாது அரசியல் ரீதியாக முன்னோக்கி காட்டுவது, அரசியலில் பொறுக்கித்தனமாகும்;. புஸ்பராஜா விரும்பியது என்ன? இந்த நூலை விமர்சிக்காது இருக்கும் ஏற்பாட்டைத் தான். நூல் வெளியீட்டை ஒரு பணச்சடங்காகவே செய்தவர், அதை அங்கு விமர்சனம் செய்யாது இருக்க திட்டமிட்ட பலத்த வலதுசாரிய அரசியல் ஏற்பாட்டையே செய்தவர்.

இந்த நூலுக்கு எதிரான ஒருசில விமர்சனங்கள் பின்னால் வெளிவந்தன. பாரிசில் சிலர் இணைந்து வெளியிட்ட சிறிய நூல் அதில் ஒன்று. இது தனிப்பட்டவர்கள் சிலரின் அதிருப்தியை அடிப்படையாக கொண்டு விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது சோபாசக்தியின் விமர்சனம் மரணத்தின் பின் (இது முன் கூட்டியே எழுதப்பட்டதாக கூறப்படுகின்றது) 'அநிச்ச" இதழ் இரண்டில் வெளிவந்துள்ளது. இது அரசியல் ரீதியாக வலதுசாரிய பக்கத்தின் சிலகூறுகளை அம்பலப்படுத்த முனைகின்றது. குறிப்பாக வலது சாரியத்தை சாதிய நோக்கில் காண முனைகின்றது. மறுபக்கத்தில் இதை சமநிலைப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இந்த சமநிலைப்படுத்தலை புலிகளின் சில ஈனச்செயல்களை விமர்சிப்பதை எடுத்துக்காட்டி செய்யப்படுகின்றது. இதையே அவரும் தனது மரணத்துக்கு முந்திய செய்திகளிலும் கூட, இந்த உத்தியையே கையாளுகின்றார்.

இப்படியான முயற்சி எல்லாம், வலதுசாரிய புலியெதிர்ப்பு அரசியல் உள்ளடகத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. சாதிய அடிப்படையில் நிராகரிக்கின்ற சமநிலைக் கோட்பாடு, மக்கள் பற்றிய முழுமையாக புரிந்த தெளிவாக வழிகாட்ட திறனற்ற வெளிப்பாட்டின் விளைவாகும். 'மௌனம் என்பது சாவுக்கு சமம்" என்று கூறுவதால் மட்டும் நிலைமை மாறிவிடுவதில்லை, மாறாக மக்களுக்கு வழிகாட்டும் வகையில் முன்நகர்வது அவசியமாகும்.


சோபாசக்தி சமூகம் சார்ந்த சமகால விடையங்கள் மீதான எழுத்தாளன் என்ற வகையில், அவரில் அண்மையில் ஏற்பட்டு வரும் மாற்றம் வரவேற்க்கத்தக்கது தான். இன்னமும் மக்களைவிட்டு விலகி நிற்கும் போக்கு, சமூகத்துடன் தொடர்பற்ற சூழல் உருவாக்கும் தனிமனித அற்பத்தனங்களில் எஞ்சிக்கிடக்கின்றது. இது புஸ்பராஜா போன்ற வலதுசாரிகளுக்கு தொங்கு பாலத்தை கட்டிவிடலாம் என்று முனைப்புக் கொள்கின்றது. மக்களையும் அவர்களின் வாழ்வு சார்ந்த உள்ளடகத்தில் இருந்து சமூகத்தைக் கற்றுக் கொள்வது அவசியமானதாகும். தனிமனிதர்கள் மக்களின் வாழ்வுடன், எப்படி எந்த சமூகப் பொருளாதார அரசியலுடன் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையே நுணுகிப் பார்த்து, அணுகுவதையே கோருகின்றது சாதி மட்டுமல்ல, சமூகத்தின் பல ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் சமூக உணர்வோட்டங்களை புரிந்து, உணர்ந்து, வாழ்ந்து பிரதிபலிப்பதன் மூலம், மக்கள் கலைஞனாக அவர்களுக்காகவே வாழ முற்படுதலே எழுத்தாளனின் சமூகக் கடமையாகும். இதைவிடுத்து தனிநபர்களின் வலதுசாரி பாத்திரத்தின் இழிந்துபோன அரசியலை மொத்தமாக பார்க்காமல் பகுதியாக அதை பிரித்து போற்றி நிற்கும் முயற்சி அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரானதே. இதை புரிந்துகொள்வது காலத்தின் தேவையுடன் அவசியமானது.


மரணத்தை தெரிந்து கொண்டு திட்டமிட்டு செய்த தீடீர் அரசியல்


தனது மரணம் தெரிந்தவுடன் ஒரு திட்டமிட்ட ஒரு அரசியலையே புஸ்பராஜா செய்தார். வழங்கிய பேட்டிகள், மற்றும் இந்தியா வரை சென்று நடத்திய அவசரச் சந்திப்புகள், மற்றும் இறுதியாக எழுதி வைத்தவை என சில.

பலரும் இதற்குள் நின்று புஸ்பராஜாவை காட்ட முனைகின்றனர். ஆனால் எதார்த்தம் என்னவென்றால் இந்த இறுதி செய்திகளில் கூட, மக்களைப்பற்றி அவர் பேசவில்லை. புலியிடம் வேண்டுகோள்களை விடுத்து, வலதுசாரிய சீர்திருத்தத்தையே மீண்டும் முன்வைக்கின்றார்.

'புஸ்பராஜா பேசுகின்றேன்" என்ற தனது இறுதிக் குறிப்பில் '..என்னால் இயன்றதைச் செய்தேன். அது வெற்றியளித்தது" என்கின்றார். அந்த வெற்றி தான் என்ன? தமிழினமோ தோற்றுப் போய் நிற்கின்றது. தனது சொந்த வாழ் நிலையை சொல்லியழ கூட முடியாத அவல வாழ்வில் தவிக்கின்றது. ஆனால் புஸ்பராஜா சொல்லுகின்றார் தான் இயன்றதைச் செய்து, அதுவும் வெற்றியளித்துள்ளது என்கின்றார். தனிப்பட்ட வாழ்க்கையை அப்படி சொல்லுகிறாரா?

பொதுவாழ்வு என்றால், அது வெற்றியளித்தது என்றால் அது என்ன? அது வலதுசாரிய புலி அரசியல் தான். இதற்கு வெளியில் வேறு எதுதான் வெற்றியளித்தது. அவர் வலிந்து வரிந்து கொண்டு வலதுசாரிய அரசியலின் இன்றைய நிலையைத் தான், அவர் வெற்றியென்கின்றார்;. அது எவ்வளவு பெரிய தோல்வி என்பதை, புலி அழிவுடன் காலம் தெளிவாகவே எடுத்துக் காட்டும்.

அந்தக் குறிப்பில் புஸ்பராஜா விட்டுச் செல்லும் வேண்டுகோளில் 'தயவு செய்து கொலைகளை நிறுத்துங்கடா. போதும் கொலைவெறி, மனித சுதந்திரத்தை மதியுங்கள். உயிரின் விலையை மதியுங்கள்" என்கின்றார். இந்த வரிகள் பொதுவாக பார்க்குமிடத்தில், என்ன ஜனநாயக கோசம்! இது எல்லோரையும் மெய்சிலிர்க்க செய்கின்றது. ஆகா ஆகா ஒரு கை பிடியுங்கள், புஸ்பராஜாவை நாம் தூக்குவோம் என்று முனைகின்றனர். இந்த விடையத்தை நாம் எப்படி புரிந்து கொள்வது. இதுவும் வலதுசாரிக் கோரிக்கை தான்.

இவர் தனது அதிகாரம் நிலவிய காலத்தில், இவர் உதவியுடன் நடந்த தனிமனித படுகொலைகள் முதல் நியாயப்படுத்திய தனிமனித படுகொலைகள் வரை இவர் விமர்சித்தாரா எனின், இல்லை. தனிமனிதப் படுகொலையை நியாயப்படுத்தும் வலதுசாரி அரசியலை அவர் விமர்சிக்கவில்லை. அந்த அரசியலே வலதுசாரிய பாசிசமாகி புலிகளாகவுள்ளது. தனிமனித பயங்கரவாத வலதுசாரிய அரசியல் தான் இன்றைய படுகொலைகள். அன்று தமிழரசுக் கட்சியும், பின் கூட்டணியும் தனிமனித படுகொலைகளை செய்வித்து, அதை ஊக்குவித்து உதவிய வரலாற்றின் தொடர்ச்சிதான் இன்றைய புலிகள். பிரபாகரன் அன்றைய தமிழரசு கட்சி உருவாக்கிய கொலைகார கும்பலின், கொலைகாரனாக இருந்தவர் தான். இன்று மொட்டையாக கடந்தகாலத்தை நியாயப்படுத்தி புனிதப்படுத்தியபடி, கொலைகளை நிறுத்து என்று சொல்வது எவ்வகையானது.

கொலைகளை நிறுத்துங்கள் என்பது அரசியல் மோசடிதான். இன்று ஏகாதிபத்தியம் முதல் புலிகள் அல்லாத அனைத்து தரப்பும் இதை முன்வைக்கின்றது. இதில் அரசியல் ரீதியாக கூர்ந்து பார்த்தால், மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடியே எஞ்சுகின்றது. அன்று தேசியத்தின் பெயரில் அனைவரும் ஒன்றாக மக்களுக்கு எதிராக இருந்தது போல், இதுவும் சூக்குமாக மக்களுக்கு எதிராக உள்ளது. கொலைகளை நிறுத்து என்ற கோரிக்கையில் சரி, கண்டனத்திலும் சரி, எப்படி புஸ்பராஜா தனது கோரிக்கையை ஏகாதிபத்திய கோரிக்கையில் இருந்து வேறுபடுத்துகின்றார். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். தான் இருந்த வலதுசாரிய அரசியல் வழியில் இருந்து, இதை எப்படி வேறுபடுத்துகின்றார்? உண்மையில் ஏகாதிபத்திய வலதுசாரிய கோரிக்கையும், புஸ்பராஜாவின் வலதுசாரியக் கோரிக்கையும் ஒன்றுதான். இந்தியாவின் கோரிக்கையும் புஸ்பராஜாவின் கோரிக்கையும் ஒன்றுதான். ஆனந்தசங்கரியின் கோரிக்கையும், புஸ்பராஜாவின் கோரிக்கையும் ஒன்று தான். தனது கடந்தகால வலதுசாரிய அரசியலை விமர்சிக்காது, அதை போற்றியபடி மொட்டையாக கூறிவிட முடிகின்றது.

டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய அவரின் இறுதிப் பேட்டி ஒன்றில், மக்களுக்கு சொல்ல எதுவுமில்லை என்று கூறும் புஸ்பராஜா, புலிகளிடம் வேண்டுகோளை விடமுடிகின்றது. இது தான் புஸ்பராஜா. மக்கள் பற்றிய அக்கறையற்ற வலதுசாரிய அரசியல் இப்படி கொக்கரிக்கின்றது. தனது ஒடுக்கபட்ட சாதிகளின் விடுதலையைத்தன்னும் கூட, ஒரு அரசியல் வேண்டுகோளாக விட முடியாது போகின்றது. அதை பற்றி அலசமுடிகின்றது அவ்வளவுதான். தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகளை விட்டால் வேறு யாரும் இல்லையென்கின்றார். உண்மையில் வலதுசாரிய புலியாகவே அவா பேசுகின்றார். மக்கள் இருக்கின்றனர் என்பதையே நிராகரிக்கின்றார். இது ஒரு மக்கள் விரோத வலதுசாரிக் கருத்து. கவுரவமான தீர்வுக்கு புலிகளை இணங்ககோரும் வேண்டுகோளே நகைப்புக்குரியது. சரி அந்த கவுரவம் தான் என்ன? யாருக்கு கவுரவம்? அந்த தீர்வு தான் என்ன? அது தமிழ் தேசிய அபிலாசைகளை தீர்க்குமா? சாதியை ஒழிக்குமா? ஆணாதிக்கத்தை ஒழிக்குமா? பிரதேசவாதத்தை ஒழிக்குமா? சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்குமா? தேசிய பொருளாதாரத்தை கட்டுமா? இதை எந்த வலதுசாரி அரசியலும் செய்யாது. புலிகள் இதை ஒருக்காலும் செய்ய மாட்டார்கள். பின் யாருக்கு கவுரவம்! உண்மையில் யாரிடம் வேண்டுகோள் விடவேண்டும் என்றால், மக்களிடம் தான். உண்மையில் தேசியம் என்பது, சமூகத்தின் அனைத்து அடக்குமுறையையும் ஒழிப்பதுதான்.

இதற்கு மாறாக உருவான புலிகள் என்ற வலதுசாரிகளின் சூறையாடல்கள், கொலைகள் என்பது தனிமனித பயங்கரவாதத்தின் தோற்றுவாயாகும். வலதுசாரிய தனிமனித பயங்கரவாத அரசியல், பாசிசமாகி மக்களை கண்டு அஞ்சும் நிலையில் தான், தமது இருப்புக்கான ஒரு அரசியலாக கொலைகள் அடிப்படையாகின்றது. அன்று கூட்டணி கொலைகளை செய்ய கோரியதும், உதவியதும், அதை அரசியல் ரீதியாக பாதுகாத்த வரலாற்றில், பிரபாகரனும் அதற்குள் உள்ளடங்கியிருந்தவர். அதை ஒட்டிய பல ஆவணங்களை, புஸ்பராஜாவே எடுத்துக் காட்டி பெருமைப்படுகின்றார். இப்படி கொலையை ஆதரித்து, உதவி, அரசியல் ரீதியாக முண்டு கொடுத்த இவர்கள், இன்று கொலையை நிறுத்து என்கின்றனர். ஆனந்தசங்கரியும் இதைத் தான் சொல்லுகின்றார். இவர்கள் கடந்தகாலத்தை சுயவிமர்சனம் செய்தது கிடையாது.

'விதையாய் விழுந்தாய் விருட்சமாய் எழுவோம்" என்று கோரி ஆவணம் வெளியிடுகின்றீர்களே, எதை விதையாக்குகின்றீர்கள். எதை விருட்சமாக கோருகின்றீர்கள். வலதுசாரிய அரசியலை விதையாக விதைத்து, விருட்சமாக எழுந்த புலிகளையா மீண்டும் கோருகின்றீர்கள்! போதும் நிறுத்துங்கள்!

மக்களின் பெயரால், மக்களின் முதுகில் சவாரி செய்யாதீர்கள். முடிந்தால் மக்களுக்காக, அவர்களின் வாழ்வுக்காக, உண்மையாகவும் நேர்மையாகவும் போராடக் கற்றுக் கொள்ளுங்கள்.

~

நன்றி: தமிழரங்கம்

மேலும் வாசிக்க:

Sunday, February 25, 2007

தோழர் ரட்ணா நினைவுகூரல் நிகழ்ச்சி


தகவல் :ரவி
சூரிச், சுவிஸ்

தோழர் ரட்ணா நினைவுகூரல் நிகழ்ச்சி

18.2.2007. ஞாயிற்றுக்கிழமை. நேரம் சுமார் 3 மணியைத் தாண்டியது. பகல் வெளிச்சத்தின் நுழைவுகளை தொடர்யன்னலினூடாக தாராளமாய் அனுமதித்திருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் முன்பகுதியில் தேசபிதா தோழர் ரட்ணா என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் சொந்தக்காரனான இளையதம்பி இரத்தினசபாபதியின் நிழற்படம் சிவப்பு நிறத்துணியுடன் இசைந்துபோய் இருந்தது. சக்தி, திலக் ஆகியோருடன் நிகழ்ச்சித் தலைமையை அழகிரி அவர்கள் ஆரம்பித்தார். அழகிரி அவர்களும் ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். வெலிக்கடை சிறை படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர். ஈரோஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர், அதற்காக ஆரம்பத்திலிருந்தே உழைத்தவர் என்ற ரீதியில் அவரது கூட்ட தலைமைக்கு பொருத்தப்பாடும் அதிகம்தான். தோழர் இரட்ணாவுடனான தனது நினைவுகளை மீட்டுக்கொண்ட அவரின் அமைதியான உரையைத் தொடர்ந்து பிரபா அவர்கள் பேசினார்.

ரட்ணாவின் இறுதிக்கால கோலம் அவரின் உணர்வில் செலுத்தியிருந்த பாதிப்பு அவர் உரையில் தெரிந்தது. வயோதிபர் இல்லத்தில் ஒரு அனாதைபோல் உயிர்துறந்த ரட்ணாவின் மீதான கரிசனையை தனது தோழமை உறவின் பாதிப்புத் தோய அழுத்தமான தொனியில் நினைவாக்கினார். அவருக்குக் கிட்ட இருந்த இலண்டன் தோழர்கள் அவரை பாராமுகமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டையம் முன்வைத்தார். அஞ்சலி நிகழ்ச்சியை ஓர் அஞ்சலி நிகழ்வாகவும் அரசியல் நிகழ்ச்சியை ஒரு அரசியல் நிகழ்வாகவும் நடத்துவது நல்லது என்ற அவரது முன்னுரை சற்று ஏமாற்றத்தைத் தந்தது. கிடைத்திருக்கும் வரையறுக்கப்பட்ட ஒரு மாலைப் பொழுது எல்லைக்குள் அஞ்சலி நிகழ்ச்சியை அரசியல் மேடையாகத் திசைதிருப்பி, விடயத்துக்கு வெளியே போய்விடாமலிருக்கும் முன்னெச்சரிக்கை காரணமாக இருக்கலாம். எது எப்படியோ இந்த வேண்டுகோள் நிகழ்ச்சியின் ஊடாகப் பாய்ந்த உரைகளால் இயல்பாகவே கழுவிச்செல்லப்பட்டது. கடந்தகால வரலாற்று ரீதியான உண்மைகளை பகிரவேண்டிய கட்டாயம் உள்ளது என்ற தனது வரிகளை இயக்கத்தின் கலைப்பில் இணைத்துச் சொன்னார். 1990ம் ஆண்டு 6ம் மாதம் 16ம் திகதி பாலகுமாரின் ஆளுமையற்ற தன்மையால் ஈரோஸ் கலைக்கப்பட்டு புலிகளுள் இணைக்கப்பட்டது. அதன்பின் தோழர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளே தொடர்ந்தன. காலத்தின் கட்டாயத்தில் திரும்பவும் புனரமைக்கப்பட்டு மக்களிடம் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களிற்குமான தீர்வை வலியுறுத்தும் அமைப்புகளுடன் ஈரோஸ் கைகோர்த்துச் செயற்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சி ரட்ணாவின் இழப்பை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கா என்ற கேள்வியை தாம் எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார் பிரபா. இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டும் ஒருசில மாற்று இணையத்தளங்கள் அவற்றை பிரசுரிக்காதது பற்றி வெளியில் தோழர் ஒருவர் என்னுடன் உரையாடியதும்கூட எனக்கு ஞாபகம் வந்தது. இது காலத்தின் கட்டாயமான நியதி... ஈரோசுக்கு மட்டுமல்ல மாற்று அமைப்புகளுக்கும் இந்தக் கடப்பாடு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார் பிரபா. பலஸ்தீன பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை ரட்ணா எல்லா அமைப்புக்கும்தான் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதே அவர் மற்றைய அமைப்புகளையும் அரவணைத்துச் சென்றதற்குச் சான்று என்பதை நினைவூட்டினார். இலண்டன் தோழர்கள் அவரை பாராமுகமாக மட்டுமல்ல படுமோசமாகவும் விமர்சித்தனர். குடிகாரன் என்றனர். ரட்ணா ஈரோஸ் அமைப்பை "பார்" ஒன்றுக்குள்ளிருந்துதான் தொடங்கினார்.. என்றார் பிரபா. இந்தவகை ஒழுக்க மதிப்பீட்டின் அடிப்படையில் ரட்ணாவை அவமதிப்பதற்கு எதிரான சாட்டையாக அவரின் இந்தப் பதில் இருந்தது. தோழர் ரட்ணா மரணித்த தினமான மார்கழி 12 “இன்னுயிர் ஈர்ந்தோர் தினம்” ஆக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சித் தலைவர் அழகிரி அவர்கள் இடைநேரப் பேச்சில் ரட்ணா பற்றிய தனது கருத்துகளை முன்வைத்தார். கடந்த 30 வருட காலப் போராட்டம் கீழ்நோக்கிப் போகிற நிலைதான் உள்ளது. ஆனால் அவர் விட்டுச் சென்ற குறிப்புகள் இப்போதும் பொருந்தி வருகின்றன. அதனால் அவரது கருத்துக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடியவைதான் என்றார். ரட்ணாவின் இளமைக்கால வாழ்வு பற்றிய குறிப்பில் அவர் தமிழரசுக் கட்சிக்காக இளமையில் பேசியிருக்கிறார்... சுதந்திரனில் பணியாற்றியிருக்கிறார்... லண்டன் ரைம்ஸ் இன் தென்கிழக்காசிய நிருபராக இருந்திருக்கிறார்... மலையகத்தில் கூடுதலான காலம் இருந்திருக்கிறார்... என்ற தகவல்களைச் சொன்னார். நாம் ஈழவர், நமது மொழி தமிழ், நம்நாடு ஈழம் என்ற ரட்ணாவின் வரையறுப்பை மீட்ட அவர் வடக்கு கிழக்கு மலையக முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய சொல்லாக ஈழவர் என்ற சொல்லை ரட்ணா பயன்படுத்தினார் என்றார். இந்தச் சொல் கேரளாவில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல் என்று கூறி எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது... காலப்போக்கில் இன்று எல்லோரும் சரளமாகப் பாவிக்கும் சொல்லாக இது மாறியது என்றார்.

அடுத்து இலண்டன் ரவி அவர்கள் அழைக்கப்பட்டார். அவரின் உரை எல்லாவற்றையும் தூக்கி தலைகீழாகப் போட்டமாதிரி அமைந்தது. ஒரு விமர்சன உரைபோன்ற அவரது உரை தேசிய பிராந்திய சர்வதேசிய நிலைமைகளுக்கூடாக பயணம் செய்து ரட்ணாவிடம் வந்துவந்து போனது. காந்தி சொன்ன இந்தியாவுக்கும் இன்றைய இந்தியாவுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று ஆதாரவினா தொடுத்த அவர் ரட்ணா சொன்ன கருத்துக்கள் யாவும் இப்போதும் பொருந்திவரப் போகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும் என்றார். அவரது கருத்துக்களில் இன்று பொருந்தி வருபவற்றை நாம் வளர்த்தெடுக்க வேண்டுமே யொழிய அவரின் பெயரில் நாம் அரசியல் நடத்தத் தேவையில்லை. ஈழவர் என்ற சொல்லை விசயம் தெரியாமல் பலர் பாவிக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டிய அவர் இன்று முஸ்லிம்கள் தன்பாட்டில் தனித்துவமாக வளர்ந்திருக்கிறார்கள்... மலையக மக்கள் தனித்துவமாக வளர்ந்திருக்கிறார்கள்... கிழக்கு மக்கள் யாழ் மேலாதிக்கத்தின் முகத்துக்கு நேரே நிமர்ந்து நிற்கிறார்கள். இப்படியிருக்க எல்லோரையும் இணைத்து ரட்ணா சொன்ன ஈழவர் என்ற பதத்துக்கு இன்று மீண்டும் விளக்கம் கொடுக்கலாமா? திரும்பவும் ஈரோஸ் என்ற பெயரில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப கட்டியமைப்பதில் ரட்ணாவின் கருத்துக்கள் எந்தளவு பொருந்திவரும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும் என்றார். மலையக முஸ்லிம் மக்களின் பிரச்சினை என்ன?... சிங்கள அரச அமைப்பின் வடிவம் என்ன?... அது எந்த வர்க்கத்தால் என்ன வடிவில் அமைக்கப்பட்டது?... சிங்கள குட்டி பூர்சுவாக்கள் வியாபாரத்தில் முன்னுக்கு வருவதை முதலாளி வர்க்கத்தினர் எதிர்த்தனர். அதனால்தான் இந்த வடிவத்தை சிங்கள முதலாளி வர்க்கமும்தான் எதிர்க்குது. அவர்கள் இந்த வடிவம் மாற்றப்பட வேண்டுமென நிற்கிறார்கள். உள்நாட்டுக்குள் இறைமையைப் பகிர்ந்துகொள்ள அரசு தயாரில்லை. இலங்கையின் இறைமை இந்தியா போன்ற நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்தாயிற்று. ஜேவிபி கிளர்ச்சி உட்பட்ட போராட்டங்களில் ஒன்றரை இலட்சம் சிங்கள மக்கள் இறந்திருக்கிறார்கள். அதையும் அரசுதான் செய்தது. அதாவது இந்த அரசு வடிவத்தைக் காப்பாற்ற அது யாரையும் கொல்லும். எனவே இந்தப் பிரச்சினைகளை வர்க்க வடிவில் பார்க்க வேண்டும் என்றார். திரும்ப ரட்ணாவிடம் வந்தார்.

ரட்ணாவின் கருத்துக்கள் பழங்காலக் கருத்துக்கள். அதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரிப் புனரமைக்க வேண்டும் என்றார். உடைந்து சிதறிப்போன கம்யூனிச நாடுகளெல்லாம் இன்றைய சமூக பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றியமைத்து வருகிறார்கள். அரசு இயந்திரம்தான் எமது எதிரி. சிறீலங்கா அரசு அல்ல. இன்றைய இளைய சமுதாயம் இந்தப் போராட்டத்தினூடாக தமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று பார்க்கிறார்கள். எதிர்கால சந்ததிக்காக தமது சந்ததியை அவர்கள் பலிகொடுக்கும் மனநிலையிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். உலகளாவிய நிலையில் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக மட்டும் எடுத்துச் செல்லலாமா எனப் பார்க்க வேண்டும்... உலக முதலாளியம் தனது முதலீட்டை இந்தப் பிராந்தியங்களில் கொண்டுவருவதற்கான சூழலை கொண்டுவர முயற்சிக்கிறது என்றெல்லாம் சொன்னார்.

இப்படி சுழன்றுவந்தது ரவியின் உரை. நாம் ஈழவர் என்று சொல்வது சரியா பிழையா என்று பார்க்கவேண்டும் எனவும் கிழக்கு மக்களின் எழுச்சியை தான் ஒரு வளர்ச்சியாகப் பார்ப்பதாகவும் இலங்கைப் பிரச்சினை அடிப்படையில் பொருளாதாரப் பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறதாகவும் தனது உரையை நகர்த்திச் சென்ற லண்டன் ரவி அவர்கள் ரட்ணாவின் இறுதிநிகழ்ச்சியை தாம் முன்னின்று நடத்திவைத்ததையும் குறிப்பிட்டு உரையை முடித்தார்.

தலைவர் அழகிரி அவர்கள் மீண்டும் இடைநேரத்தை எடுத்துக் கொண்டார். இந்தியாவின் தார்மீக ஆதரவை தமிழ்நாட்டு மக்களினூடாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்ற ரட்ணா அதற்கு தமிழக மக்கள் மத்தியில் எமது போராட்டம் பற்றிய நியாயப்பாடுகளை விளங்கவைக்க வேண்டும் என்றார். இந்தக் குறிப்புடன் பேசுவதற்காக நான் அழைக்கப்பட்டேன்.

எனது உரை இவ்வாறாக இருந்தது. வாழ்வு போராட்டங்களால் ஆனது. வாழ்வதற்காகவே பிறந்தோம் என்பதுபோல வாழ்வதற்காகவே போராடுகிறோம் என்ற வாசகங்கள் வாழ்வுத் தொகுதியின் வரிகள். ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராடுவது அதை வழிநடத்துவது என்பனவெல்லாம் போராட்ட வரலாறுகளாக பதியப்படுகிறது. எமது போராட்ட வரலாற்றிலும் தோழர் ரட்ணா வழிநடத்தலுக்கான முனைப்பில் தோன்றிய ஒருவர்தான்.
1975 இலேயே அதற்கான அமைப்பை உருவாக்கினார். அதுவும் இடதுசாரி சிந்தனைமுறையில் மிக கவனம் செலுத்தினார். தமிழ் பேசுகின்ற மலையக முஸ்லிம் மக்களைப் பற்றிய கரிசனையும் அவரிடமிருந்தது. ஆயுதப்போராட்டத்தை முன்மொழிந்தார்.
லண்டனில் தனிப்பட்ட தனது வாழ்வின் இருப்புக்குள் அள்ளுப்பட்டுப் போய்விடாமல் அந்த எழுபதுகளில் இந்தப் பணியைத் தொடங்கினார்... என்றளவிலெல்லாம் அவரை நாம் இங்கு நினைவுகூருகின்றோம். இந்த 30 வருட அனுபவங்களை வைத்துக்கொண்டு விமர்சிப்பது என்பது இலகுவானது. ஆனால் எதிர்காலத்தில் எழக்கூடிய நிலைமைகளை ஆய்ந்தறிந்து செயற்பட முனைவது என்பது மிகமிகமிக கடினமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

லண்டனிலிருந்து தலைமைதாங்கியதால் சர்வதேச போராட்ட அமைப்புகளின் தொடர்புகளை அவர்களின் அனுபவங்களை அவர் பெறக்கூடியதாக இருந்தது. இருந்தபோதும் இவையெல்லாம் போராட்டக் களத்தில் நிற்காமை தந்த பாதகமான அம்சங்களை எந்தவிதத்திலும் ஈடுகட்டவில்லை. இன்று விடுதலைப் புலிகள் அமைப்பை இந்த விடயங்களில் பொருத்திப் பார்த்தால் இது புரியும். 83 கலவரமும் அது ஏற்படுத்திவிட்டிருந்த தாறுமாறான அரசியல் குழப்பமும் இயக்கங்களின் பெடியள்பிடி படலமும் வீக்கமும் அதற்கு இயக்கங்களின் அரசியல் உள்ளடக்கம் ஈடுகொடுக்க முடியாமல் போனதும் என்றவாறான சூழல் நிலவிய காலம் தோழர் ரட்ணாவின் களநிலையிலில்லாத தலைமைத்துவம் பாதகமாகவே பார்க்கப்பட முடியும்.

பின்னரான காலப் பகுதியில் அதாவது இயக்க அழிப்பின் பின்னரான காலத்தில் அவர் இன்னமும் மண்ணைவிட்டு அன்னியமாவது தவிர்க்கமுடியாததாகியது. திம்புப் பேச்சுவார்த்தை பங்குபற்றல், பின்னர் 1989 தேர்தலில் அவரது பங்குபற்றலும் என அவரது செயற்பாடுகள் தொடர்ந்தது. எல்லாமும் கைவிட்டுப்போன நிலையில் அவர் தனது அரசியல் தேடல்களை இந்த சமூகத்துக்கு வழங்கும் ஆற்றலுள்ளவராக இருந்தும் அதை அவர் செய்ததாகத் தெரியவில்லை. இயக்கங்களால் திட்டமிடப்பப்டே புத்திஜீவிகள் அழிக்கப்பட்டார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் மௌனமானார்கள். உலகின் விடுதலைப் போராட்ட வரலாறுகள் பல சிந்தனையாளர்களைத் தந்தது. தத்துவங்களின் மீதான மறுவாசிப்புகளையும் செழுமைப்படுத்தல்களையும் அந்தச் சிந்தனையாளர்கள் தந்தனர். ஆனால் எமது போராட்ட வரலாறு இந்தப் பெறுமதியைத் தரவில்லை என்றே வேதனையுடன் சொல்ல வைக்கிறது. ரட்ணா, மகா உத்தமன் போன்ற புத்திஜீவிகள் இதற்கான ஆளுமையை மொழியின் தளத்திலும் அரசியல் தத்துவார்த்தத் தளத்திலும் பெற்றிருந்தும் இந்தப் பணியைத் தவறவிட்டனர். இது எமக்கு நேர்ந்த இழப்பு. நாம் தமிழகத்தில் தோன்றிய சிந்தனையாளர்கள் அல்லது ஆய்வாளர்களிடமிருந்துதான் இந்த அறிவைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.

தேசபிதா, தேசத்தின் குரல் என்பதெல்லாம் தேவையானவைதானா? அதுவும் இடதுசாரி சிந்தனை மரபில் செயற்பட்ட ரட்ணாவுக்கு கீழைத்தேய மரபில் தேசபிதா என்ற பட்டத்தைக் கொடுப்பது எந்தவகையில் பொருத்தமானது. தோழர் லெனின் தோழர் மாவோ தோழர் பிடல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தேசபிதா ரட்ணா என்று சொல்வது எந்தவகையில் சரியானதாகும். தேசிய இனப் பிரச்சினையிலிருந்து நாம் விடுபடும் வரையில்தான் தேசியம் நடனத்துக்கான இசையாகிறது. விடுபட்டபின் முன்னுக்குவரும் ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்களும் அதை வழிநடத்தப்போகும் தேசபிதாக்களும் வந்துகொண்டுதானிருப்பார்கள். தேசபிதா என்ற சட்டகத்தை ஏற்படுத்தி அதை ரட்ணாவுக்கு மட்டும் பொருத்தி வைப்பது சரியானதாய்ப் படவில்லை.

ஈழவர் என்ற சொல் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் மலையக மக்கள் எல்லோரையும் உள்ளடக்கியது. அதனதன் தனித்தன்மைகளை கவனத்தில் எடுக்காத குறைபாடு மலையகம் தானாகவே கையைவிட்டுப் போயிற்று. முஸ்லிம் மக்கள் தம்மை ஒரு தனித்தேசிய இனமாக காண முற்படுகின்றனர்;. இன்ற கிழக்கு மக்கள் தமது தமது தனித்துவத்தை முன்நிறுத்தி நிமிர்ந்து நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் இன்று ஈழவர் என்ற பதம் பொருத்தப்பாடுடையதாக இருக்குமா. இதேபோல்தான் இன்று கிழக்கின் தனித்துவம் பற்றி பேசிக்கொள்பவர்கள் முஸ்லிம்களின் பிரதேசரீதியிலான தனித்தன்மைகளை கணக்கிலெடுக்காது முஸ்லிம்கள் என்று ஒரே பதத்துக்குள் சொல்லிக்கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.

எது எப்படியோ வரலாற்றின் புள்ளிகளில் மாற்றத்தை அல்லது முறிவை ஏற்படுத்தியவர்களை நாம் நினைவுகூரத்தான் வேண்டும். அந்தவகையில் ரட்ணாவை நாம் நினைவுகூர்வது தேவையென்றெ எனக்குப் படுகிறது என்று கூறி எனது உரையை முடித்துக் கொண்டேன்.


அடுத்துப் பேசிய சக்தி அவர்கள் "துவங்கச் சொன்னேன் துவக்கைத் தூக்கியிட்டாங்கள்" என்ற ரட்ணாவின் அன்றைய விசனத்தை ஞாபகப்படுத்தினார். ரட்ணா நாவலப்பிட்டியில் தனது கல்வியை மேற்கொள்ளும்போது மலையக மக்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தார். இலக்கியத் துறையிலும் அவரது செயற்பாடு அமைந்திருந்தது. ஈஆர்ஓ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறுபட்ட ஆய்வை மேற்கொண்ட பின்னரே 1975 இல் ஈரோஸ் அமைப்பை உருவாக்கினார். பலஸ்தீன, ஏஎன்சி (ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்), ஐரிஸ் விடுதலை அமைப்பு போன்ற விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட ரட்ணாவின் போராட்ட வீரியங்களை குறிப்பிட்ட சக்தி அவர்கள் ஈபிஆர்எல்எப் பிரிந்து சென்றபோது ஈரோசுக்குள்ளும் முரண்பாடுகள் அதிகமாயின... அவரது பதவிகள் பறிக்கப்பட்டு சாதாரண உறுப்பினராக இருந்தார் என்றார்.

இந்திய இலங்கை ஒப்பந்த காலம் முடிந்த நேரத்தில், “போராட்டத்தினை நாசப்படுத்திவிட்டாங்கள்... பிரபாகரன் விடான்... அவன் அழிப்பான்... அவன்ரை அழிவுக்கும் அவன்தான் காரணமாயும் இருப்பான்.” என்று ரட்ணா எரிச்சலடைந்ததையும் சக்தி நினைவுகூர்ந்தார்.

ரட்ணா ஈழவிடுதலைப் போராட்டத்தை மார்ச்சிய சிந்தாந்தத்தின் அடிப்படையில் தொடக்கியவர். அதனால் அவரை விமர்சிப்பதற்கு மார்ச்சிய தத்துவத்தைப் புரிந்துகொண்டவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றார் சக்தி. 88 இல் இலங்கை ஒரு லெபனானாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றவர் ரட்ணா. 1990 இல் பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டபோது சர்வதேச அழுத்தத்தினூடாகத்தான் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படலாம் என்ற அபிப்பிராயத்தை முன்வைத்தார். பிரதேச ரீதியான தனித்தன்மைகள் சரியாக அடையாளங்காணப்பட்டு முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் வடக்கும் கிழக்கும் பிரிய நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார். அவரிடம் இருந்த ஆளுமையையும் ஆற்றலையும் பார்க்கும்போது நாம் ரட்ணாவை சரியாகப் பயன்படுத்தவில்லையென்றே சொல்லத் தோன்றுகின்றது. ஈரோசின் மிதவாதப் போக்குத்தான் பாலகுமாரையும் இப்படியாய் சறுகவைத்தது என்று சொல்லலாம் என்ற தனது அபிப்பிராயத்தை சக்தி அவர்கள் கூறினார். ரட்ணா மெய்ப்பித்த மார்க்சியத்துக்கு மேலாக எந்த விளக்கத்தையும் கொடுத்துவிட முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்... அவரது கருத்துக்களினூடாக புதிய விளக்கங்கள் வரவேண்டும். சுயவிமர்சனத்தினூடாக அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது ஒன்றுதான் தோழர் ரட்ணாவுக்கான எமது அஞ்சலியாக இருக்க முடியும் என்று தனது உரையை முடித்துக்கொண்டார் சக்தி.

அடுத்து திலக் அவர்கள் உரையைத் தொடங்கினார். சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது என்பது வெறும் இனவிடுதலையாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழல்பவர்கள் பற்றி கல்வி வசதி இல்லாதவர்கள் பற்றி சமூக ஒடுக்குமுறைகள் பற்றியெல்லாம் ரட்ணா சிந்தித்தார். மார்ச்சியத் தத்துவம்தான் இந்த சமூகத்துக்கு விடிவைத் தரும்... தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒரு வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்றவர் ரட்ணா. எமது போராளிகள் பகடைக் காய்களாக மாற்றப்படக்கூடாது என்று கரிசனைப்பட்டார். எமது நாட்டில் தொழிற்சாலைகள் பெருமளவில் இல்லை. அதனால் தொழிலாளர்கள் மயப்பட்ட நாடு இல்லை. ஆனால் விவசாயிகள் இருக்கிறார்கள். வயல்கள் கடல் என திறந்த வளம் எம்மிடம் உள்ளது என்பதை கவனத்தில் எடுத்து மார்க்சியத்தைப் பிரயோகிக்க முனைந்தவர் ரட்ணா.

ரட்ணாவை நான் ஒரு கம்யூனிசவாதியாகவே பார்க்கிறேன். அனாலும் கம்யூனிச நாடுகளின் உடைவை அவர் ஆழமாகப் பார்க்கவில்லை. கொர்ப்பச்சோவின் பிறஸ்ரோறிகா கிளாஸ்நோஸ்ட் என்பவற்றை அவர் ஆரம்பத்தில் ஆதரித்தார். பின்னர் ஏற்பட்ட மோசமான நிலைமையைக் கண்டு அதை பிற்பாடு எதிர்த்தார். இப்படியான ஊசலாட்டத்தை ரட்ணா மீதான விமர்சனமாக திலக் முன்வைத்தார்.

நாம் நிறைய விடயங்களை ஆயவுக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. நூல்களை வாசிக்கும் பழக்கம் எமக்கு வேண்டும். தனியே இணையத்தள வாசிப்பு மட்டும் போதாது என்று எமது வாசிப்பின் மீதான சோம்பேறித்தனத்தை சுட்டிக்காட்டினார் திலக். இன்று மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை ஒற்றுமையாக நாம் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு ஈரோஸ் கொடியை நாம் காவவேண்டியதில்லை. சுற்றுச்சூழல் மாசடைவது போன்ற பல விடங்களும் இன்று சமூகத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. இதைப் பற்றிய ஈடுபாடுகளும் எமது புரட்சிகர சிந்தனைமுறைகளின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள உதவும். ரட்ணாவின் 20 வருடங்களுக்கு முந்தைய சிந்தனைகள் பல இன்றும் பொருந்தி வருவதை நாம் பார்க்கிறோம்... அந்தவகையில் ரட்ணாவை நாம் நினைவுகூர்கிறோம் என்று தனது உரையை முடித்துக் கொண்டார் திலக்.

அடுத்து சிவா அவர்கள் தனது உரையை நிகழ்த்தினார். ரட்ணா தாய் இயக்கத்தின் மூலவேர். தாயும் அவரே தந்தையும் அவரே. தேசபிதா என்று அழைப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தோழர் ரட்ணாவின் கருத்துக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவை. அவரது கருத்துக்களை நாம் ஏற்றுச் செயற்பட்டு அதில் நாம் தோல்வியடைந்திருந்தால் அவரது கருத்துகளை நாம் கேள்விக்கு உட்படுத்தத்தான் வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லையே என்றார். இன்றைய ஈழவிடுதலைப் போராட்டம் ஏன் இந்த நிலைக்கு வந்தது. தமிழ்த் தேசியத்தில் 83 இன் கருத்தியல் பூதாகாரமாக வெடித்து -அதை கருத்தியல் என்றுகூட சொல்லமுடியாத மோசமான கருத்து வளர்ந்து- இன்றைய நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. தனிநபர் பயங்கரவாத இயக்கங்கள் உருவாகின. தத்துவார்த்த அடிப்படையில் முறையாக உருவாக்கப்பட்டது ஈரோஸ்தான். அதனால் அதன் ஸ்தாபகரான ரட்ணாவை தேசபிதா என்பது சரியானதுதான்.

கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும் என்றவர் ரட்ணா. அரசியல் இராணுவத்தை வழிநடத்த வேண்டும்.... இராணுவம் அரசியலை வழிநடத்தக்கூடாது... இரண்டும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்ற அவரது கருத்து ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. ஈரோஸ் நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஆனால் இத்தோடு சமாந்தரமாக மேவிவந்த தமிழினவாதம் முற்போக்குத் தத்துவங்களை உடைத்து பாதிப்பை ஏற்படுத்தியது. போராட்டம் தோல்வியில் முடிந்ததுக்குக் காரணம் குறுந்தேசியவாதம்தான். சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து போராடவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் ரட்ணா. ஆனால் தமிழ்த் தேசியம் பிற்போக்கான நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழ்-முஸ்லிம் உறவுகளை உடைத்துப் போட்டார்கள் தமிழ்க் குறுந்தேசியவாதிகள். அன்று பெண்களையும் போராட்டத்தில் இணைக்கவேண்டும் என்ற அடிப்படையில் அவர் கொடுத்த விளக்கத்தை கேலிசெய்தவர்கள் புலிகள்... இன்று?... மேலும் காலம்கடந்த ஞானமாக இன்று "ஆயுதம் ஒரு கையிலும் உற்பத்திக் கருவி மறு கையிலும்" என்று அறைகூவல் விடுக்கிறார் பாலகுமார்.

ஈபிஆர்எல்எப் வெளியேற்றத்தால் ஈரோஸ் பலவீனமடைந்தது என்றார்கள். உண்மைதான். ஆனாலும் ஈரோஸ் அதிலிருந்து மீண்டு வந்தது. அது பலவீனப்படுத்தப்பட்டதும், பாதுகாக்கப்பட்டதும் பிரபாகரன்களால்தான். வேலுப்பிள்ளை பிரபாகரனால் அது பலவீனப்படுத்தப்பட்டது. ராஜநாதன் பிரபாகரனால் பாதுகாக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை முன்னெடுத்துச் செல்ல உழைக்க முன்வரவேண்டும். மற்றைய குழுக்கள் அங்கு நின்று சுதந்திரமாக கருத்துக்கூற முடியாத நிலை. புலம்பெயர் தேசத்திலோ “புலியை அடி... புலியை அழி” என்று கூறும் மாற்றுக் கருத்தாளர்கள் அரசைப் பார்த்து “ஒரு தீர்வை வை” என்று சொல்வதில்லை. அமைதி, ஜனநாயகம்... இதுதான் இன்றைய தேவை. இது ஒரு அரசியல். இதில் நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இதுவே நாம் செலுத்தும் அஞ்சலி. இதற்கு ரட்ணா சொல்லிவைத்த சுயவிமர்சனம் பன்மைத்துவம் எமக்கு உதவும் என்று கூறி தனது உரையை முடித்தார் சிவா.

அடுத்து அழகு குணசீலன் பேசினார். சற்று தாமதமாக வந்ததால் முன்பு பேசிய சிலரின் கருத்துக்களை கேட்கமுடியாமல் போன அங்கலாய்ப்புடன் தனது குறிப்புகளை குலைத்துப் போட்டார். நேபாள மாவோயிஸ்டுகளின் அரசுடனான பேச்சுவார்த்தையை இந்திய மாவோயிச இயக்கங்கள் காரசாரமாக விமர்சனம் செய்தன. நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பத்திரிகையொன்றுக்குக் கொடுத்த பேட்டியில் இன்றைய புதிய போக்குகள் பற்றி விளக்கம் கொடுத்தார். இறுதியாக இவர் ஒன்றைச் சொன்னார். அதாவது நடக்கவேண்டிய புரட்சி பின்போடப்பட்டுள்ளது... அவ்வளவுதான் என்றார். இதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம்தான் முழுப் போராட்டத்தையும் நாசமாக்கிவிட்டது. இதை ரட்ணா முன்பே கவனத்தில் எடுத்துத்தான் ஈழவர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ்த் தேசியம் இன்று குறுந்தேசியமாகக் குறுகிப் போனதுக்குக் காரணம் வெறும் இன உணர்வினால் கட்டியெழுப்பப்பட்டதால்தான். சிங்களப் பேரினவாதம் எமக்கு எதைச் செய்ததோ தமிழ்த் தேசியம் குறுந்தேசியமாக மாறி அதைத்தான் செய்தது. இதுதான் பயங்கரவாதத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது. தேசியம் பிராந்தியம் சர்வதேசியம் இந்த மூன்றிலும் நடக்கும் நிலைமைகளும் கணக்கில் எடுக்கப்பட்டு எமது போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. ஆயுதத்தை எடுத்துவிட்டு பின் அரசியலை -அதை நியாயப்படுத்தும் நோக்கில்- முன்னெடுத்த வரலாறையே நாம் பார்க்கிறோம். இதை ரட்ணா மறுதலையாக சரியான வழிமுறையில் முன்னெடுக்க முனைந்தவர். இதை இன்னொரு வடிவில் சொன்னால் இராணும் அரசியல் இரண்டும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கொள்ளலாம்.

ரட்ணா யாழ் நடுத்தரவர்க்கத்துக்கு வெளியே நின்று விவசாயிகள் நிறைந்திருந்த வன்னி, கிழக்கு பிரதேசங்களை ஈரோசின் தளமாக தேர்வுசெய்தார். ஈரோஸ் இராணுவ அரசியல் சம பலத்தைக் கொண்டிருந்தது. இப்படியாய் ரட்ணாவின் கொள்ளையின்கீழ் அது வழிநடத்தப்பட்டது.

குறுந்தேசியமானது தமிழ் அரசியல் கட்சிகளிலிருந்து தொடங்கி இயக்கங்கள்வரை பற்றிப் படர்ந்ததாகும். ரட்ணாவின் சிந்தனை இதற்கு எதிர்மாறாக இருந்தது. ரட்ணா இந்தியா பற்றி நாம் தெளிவான கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்... நாம் இந்தியாவுக்குள் விழுந்ததுதான் அவர்கள் எம்மை ஆட்டிப்படைக்கக் காரணம் என்றார். இயக்கங்கள் தமது கருத்தில் தெளிவில்லாமல் இருந்தார்கள். இந்தியாவை பயன்படுத்துகிறோம் என்று உத்தியுரைத்தனர். தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டனர். உண்மையில் ரட்ணாவின் கொள்கையில் நடந்திருந்தால் நாம் இந்திய இராணுவத்தின் வரவை ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பாக புரிந்துகொண்டிருக்க முடியும். மாலை மரியாதையுடன் மக்கள் வரவேற்றிருக்க மாட்டார்கள். தமது நலன்கள் பாதிக்கப்படும்போதே புலிகள் இந்திய இராணுவம் தமது எதிரிகள் என்பதை மக்களுக்குச் சொல்லவருகிறார்கள்.

ரட்ணா பலஸ்தீன, ஐஆர்ஏ போன்ற விடுதலை அமைப்புகளுடன் தொடர்பைப் பேணினார். இப்படியான நேச சக்திகளோடு இப்போதும்கூட நாம் தொடர்பு வைத்திருப்பதில்லை. எமது சமூகத்துக்குள்ளேயே குண்டுச் சட்டிக் குதிரையோட்டம் நடத்துகிறோம். வருடத்துக்கு ஒன்பது பத்து நிகழ்ச்சிகளை எமக்குள்ளேயே நடத்திமுடிக்கிறோம். இந்தியப் போராட்டக் குழுக்களோடுகூட எமக்குத் தொடர்புகள் கிடையாது. நாமோ நெடுமாறன், வைகோ, முன்னர் எம்ஜிஆர் கருணாநிதி... என்று கையேந்தி நின்றோம். நிற்கிறோம். ரட்ணா அன்று சொன்ன விடயங்களின்வழி நோக்கியிருந்தால் நடந்திருந்தால் இன்று எமது போராட்டம் வேறு நிலையில் நின்றிருக்கும். பயங்கரவாதிகள் என்ற பட்டம் நாமாகத் தேடிக்கொண்டதுதான். எமது நடவடிக்கைகள்தான் காரணம். இருட்டில் விடப்பட்டிருக்கும் நாம் அனைவரும் ரட்ணாவின் சிந்தனைகைளை நினைவுகூரவேண்டியது அவசியமாகும் என்றார் குணசீலன்.

அரசியல் உரையாடலுக்குள் சென்ற அவரது பேச்சு முதலாளித்துவம் மார்ச்சியத்தை ஆயந்து தனது ஆயுளை நீடிக்கும் சூட்சுமத்துக்குள் போய் முதலாளித்துவத்தின் சமூக ஜனநாயகம் பற்றி உரையாடியதோடு மார்ச்சியம் பின்நவீனத்துவத்திற்குள்ளும் போய்வந்து சுவிசில் ~தமீமீலன்| என்ற சொல்லின் அர்த்தம் அடையாளப்படுத்தலா இழிவுபடுத்தலா என்ற வினாவுக்குள்ளும் நீண்டு வளர்ந்திருந்தது.

தொடர்ந்து பாஸ்கரன் அவர்கள் தனது சிறு அஞ்சலியுரையை நிகழ்த்தினார். ரட்ணாவுக்கு தன்னை தலைவராக முன்னிறுத்தும் எண்ணம் இருந்திருந்தால் இன்று வயோதிபர் மடத்தில் தங்கியிருந்து அனாதையாக உயிர்பிரிந்திருக்கும் நிலை எற்பட்டிருக்காது என்றார். அவரின் கொள்கைப்படி நடந்திருந்தால் தமிழ்பேசும் மக்களின் போராட்டம் இவ்வளவு அழிவுகள் இயக்க அழிப்பு இனங்களுக்கிடையிலான மோதல்கள் அழிப்புகள் வெளியேற்றங்கள் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் என தொடர்ந்திருக்காது என்ற தனது ஆதங்கத்தை முன்வைத்தார்.

பின்னர் சிறீநாத் அவர்கள் தனது உரையை நிகழ்த்தினார். தோழர் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தமான ஒருவர் ரட்ணா. அவரால் வளர்க்கப்பட்டவர்கள் வேறு இயக்கங்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தனர் என்றார். பாலகுமாரின் நிலைப்பாட்டை வேறொரு கோணத்தில் பார்த்த அவர் எங்களை அழிவிலிருந்து காப்பாற்றி அடுத்த கட்டத்துக்கு யோசிக்க வைப்பதற்காக சிலவேளை அப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன் என்றார். தோழர்கள் பாலகுமார், சங்கர் ராஜி, ரட்ணா போன்று பரந்த பார்வை எமக்கு இருந்திருந்தால் நாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம் என்றார் சிறீநாத்.

அடுத்து ஜெகநாதன் (சுவிஸ்) பேசினார். இங்கு பேசப்பட்ட விடயங்கள் பல ஆறுதலாக அமர்ந்திருந்து பேசப்பட வேண்டியவை... அதற்கு இது உகந்த மேடையல்ல என்றார். இந்தியா பற்றிய ஏற்கனவேயான உரைகளைக் கவனத்திலெடுத்த அவரது பேச்சு இந்தியா எமது பிரச்சினைக்குள் தலையிடுவது இந்தியாவின் விருப்பம் அல்லது நல்லெண்ணம் சார்ந்ததா அல்லது அதன் பிராந்திய பாதுகாப்புச் சார்ந்ததா என்ற வினாவை விட்டுச்சென்றது. ஈழவர் என்ற ரட்ணாவின் உள்ளடக்கலை ஏற்றுக்கொண்ட அவர் ரட்ணாவின் சிந்தனையை எம்முடன் இணைத்துக்கொள்வது அவசியம். இதை நாம் செய்யத் தவறினால் எமது சமூகத்துக்கு நாம் நல்லது செய்யத் தவறியவர்கள் ஆவோம் என்றார்.

கடைசியாக உரைநிகழ்த்திய செல்வராசா மாஸ்ரர் அவர்கள் ரட்ணாவின் சிந்தனைகளை எமது போராட்டம் செயற்படுத்தாத காரணத்தால் இன்ற இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றார். ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வா, அமிர்தலிங்கம்... என பாராளுமன்றம் போன எமது தலைவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகச் சென்றனர். ரட்ணா விடுதலை அமைப்பின் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய் தமிழ் மக்களின் பிரச்சினையை முன்வைத்த தலைவர் என்றார். ரட்ணாவின் இறுதிநிகழ்ச்சியை நினைவூட்டிய அவர், பாரதியின் இறுதிச்சடங்கிலும் 13 பேர்தான் பங்குபற்றியிருந்தனர். அவனின் பெயர் இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது என பிரமாண்டங்களின் மாயையை சிதைத்தார். ரட்ணாவின் சிந்தனைகளை எதிர்காலச் சந்ததி நினைவுகூhந்து கொண்டுதானிருக்கும். அதன்படி நடந்து எமது அடுத்த சந்ததியாவது விடுதலையை வென்றெடுக்கட்டும்.... ரட்ணா ஒரு தீர்க்கதரிசி என்ற போற்றுதலுடன் தனது அஞ்சலியை நிகழ்த்தினார் செல்வராசா.

சுமார் 100 பேருக்கு மேல் வந்திருந்தனர். பலர் அமர்ந்திருந்தனர். மிகுதிக் கதிரைகளை அதன் வெறுமைக்கு விட்டுவிட்டு பின்னால் எழுந்துநின்று பண்பாடு காத்தனர் மிகுதிப்பேர். மாறுபாடான கருத்துக்கள் கொண்டவர்கள் என்று அறியப்பட்டும் அவர்களுக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்காமல் உரைநிகழ்த்த அழைத்தது மற்றும் முரண்பட்ட கருத்துகளுக்கு இடைஞ்சல் எதுவும் செய்யாமல் அதை இயல்பாக எதிர்கொண்டது போன்ற சூழல் உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. இது ஈரோஸ் அமைப்பின் அரசியல் சுவறிய சூழல் என்றே எனக்குப் பட்டது. இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் அனுப்பப்பட்டும் அதை குப்பைக்கூடையுள் வீசிவிட்டு மவுசை நகர்த்தும் இணையத்தள ஜனநாயகத்தை நொந்தபடி நகர்ந்தோம். யன்னல்கள் இருண்டிருந்தன. நேரம் எட்டுமணியைத் தாண்டியிருந்தது.


18.02.2007

நன்றி: ஊடறு

கவிதை எழுதத் தொடங்கிய மனநோயாளிகளிடம் சில கதைகள் உண்டு.

- ராசு (இலங்கை)

ன்னும் கண்டறியப் படாத நந்த வனங்கள் பற்றிய கனவை சிலர் மட்டுமே காண்கிறார்கள். எளிமையும் உறுதியும் விரிந்து கிடக்க முற்றிலும் மாறான அந்த உலகை ஆதர்ஸிக்கிற ஜீவன்களை புனிதர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

1 .நெஞ்சு கனக்க மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் பெண் இனம் பற்றிய கட்டுக்கதைகளையும் (கற்புக்கரசி கண்ணகி, பத்தினி சீதை), இன்னும் புரியப்படாத மர்மமொன்று அவளை சுற்றியலைவதாக வெற்று யூகங்களில் திரிய வைத்த சூன்ய இலக்கியங்களையும் பகிஷ்கரித்துக்கொண்டு முற்றிலும் வேறான புதிய இலக்கிய செல்நெறியை தமிழில் பெண் கவிதையாளர்கள் ஏற்படுத்தினர்.

மதம், கலாச்சாரம், பழமை பேணல் போன்ற பாரம்பரிய சமூக அசைவியக்கக் கட்டமைவுகளுடன் விழுந்து கிடந்த குடும்ப நிறுவனமே பெண்களது முதலாவதும் மிகப் பெரியதுமான சவாலாக எழுகிறது. அதேவேளை, அடிமைப்படுத்தப் படுகிறோம் என்று தெரிந்தே அடிமைப்படுத்தப் படுவதும் ஒடுக்கப் படுகிறோம் என்று தெரியாமல் ஒடுங்குவதுமான தார்மீக விஷயங்களும் பெண்களுக்குப் புரிந்து போயிற்று. உடல் அமைப்பைக் காரணம் காட்டி பெண் மென்மையானவள் அதனாலேயே வலுக்குன்றியவள் என்று கீழ்மைப்படுத்துகிற ஒரு கருத்தியலும், தாய்மையைக் காரணம் காட்டி மதிக்கப்படவேண்டியவள், பூஜித்துப் பாதுகாக்கப் படவேண்டியவள் (சக்திமரபு) என்று மேன்மைப்படுத்துகிற மற்றொரு கருத்தியலுமே இலக்கிய மரபாகிப் போனது. இலக்கியவாதிகளோடு சமூகவியலாளர்களும், வரலாற்றாய்வாளர்களும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி இது.

ஆண்வழிப்பட்ட சிந்தனைகளே பெண்ணின் சிந்தனைகளாக இருந்த காலம் போய் நவீன இலக்கிய காலம் ஒரு திருப்பு முனையாக எழுகிறது. பெண்ணை ஏன் உயர்த்த வேண்டும் அல்லது கீழ்மைப் படுத்த வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவளை அவளாக இருக்க விடுங்கள் என்ற நியாயமான கேள்வியை மனித உறவுகளிடம் விடுத்துக் கொண்டு எழுந்தவை தான் பெண் எழுத்துக்கள். இங்கு நிழல்களின் இரைச்சலாய் எழுத்துக்கள் குவிகிற வழக்கம் மாறி பெண் பதுக்கி வைத்த பார்வைகள் வெடித்துச் சிதறியது. பனியில் எழுந்து விழியால் கரைந்து அறைக்குள்


கழித்த மூன்று காலங்களையும் மரண விசாரணை செய்தார்கள். மட்கிப் போகிற மார்பின் அளவுகள் பற்றிய சந்தேகங்களை கொளுத்தி விட்டு கடற்கன்னிகளைச் சந்திக்கப் புரப்பட்டுப் போனார்கள்... சங்கரி, சிவரமணி, ஆழியாள், ஒளவை, மைத்ரேயி, செல்வி போன்றவர்களிலிருந்து இன்றைய திகதி வரை எழுதிக் கொண்டிருக்கும் பெண்ணியா வரை பெண்ணிய அமைப்பு களாலும், சஞ்சிகைகளாலும், ஊக்குவிக்கப் பட்டார்கள். அந்த வகையில் பெண்ணிய அமைப்பான ஊடறுவின் முதல் முயற்சி ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ எனும் பெண்ணியாவின் கவிதைத் தொகுதி. இதில் 15 கவிதைகள் உள்ளன.

2 . ஒரு படைப்பாளியின் ஆளுமையை ஆய்வு செய்வதென்பது அதன் வடிவம் புலப்பாடு, என்ன விதமாக அமைந்துள்ளது என்பதோடும், அவை படைப்பாளியின் எந்த விதமான உளவியலை வெளிப்படுத்துகிறது என்பதோடும், இவை எல்லாவற்றுக்கும் காரணமான படைப்பாளியின் வாழ்க்கைப் பின்னணி எவை என்பதை ஆய்வு செய்வதோடும் தொடர்புடையது. அதேவேளை பழம் பெரும் பண்பாட்டுக்குள் மனிதர்களைப் புதைக்கிற வாழ்க்கை மரபை மிக அவதானமாக மறு விசாரணைக்குப் போடுகிற எழுத்தாளர்களை திறனாய்வின் மூலம் மீள்கட்டுமானம் செய்யும் போதுதான் இலக்கியத்தின் வீரியத்தன்மையும் எல்லை கடக்கிறது. மொழியின் எளிய அழகிய வெளிப்பாடான கவிதையில் மொழியினுடைய திரிபு நிலை அற்புதமாகச் சாத்தியப் பட்டுப் போவதால் தான் இலக்கிய வகைகளில் கவிதை உன்னதமாகப் பார்க்கப் படுகிறது.

3. அது நாங்கள் புலம்பெயர்ந்து மறவன்புலோவில் ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த காலம். அழகிய குளம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை விழுந்து கிடக்கும் வயல், நெல்லி மரத்துடனான பால்ய சினேகம். நான் போகும் போது கையாட்டி விடைபெறவும், அழும் போது தலை தடவி ஆறுதல் சொல்லவும் ஒரு சினேக ஜீவனாய் அந்த நெல்லி எனக்கிருந்த காலம். புளிப்பும் இனிப்பும் தட்டிய அதன் கனிகளையும் அந்த நெல்லி மரத்துடனான நேசத்தையும், பனியடர்ந்த ஒரு அதிகாலையில் பெண்ணியாவை வாசித்த போது நான் உணர்ந்தேன். ‘நேசம் அல்லது நெல்லிமரம்’ என்ற கவிதையில் பத்து வருடங்களுக்கு முன் கரைந்த என் காலங்களைக் கண்டெடுத்தேன். இயற்கையின் செல்வங்களில் அலாதியாக அன்பு கொள்ளும் பெண்ணியா - ஒவ்வொரு மாலைகளிலும் மிளிரவைக்கும் நட்சத்திரங்களை எண்ணி இராக்களைக் கழிப்பவர், பறவைகளுடன் பனிதூவும் இரவுகளுடன் அமைதியும் மகிழ்வுமாக வாழ்ந்து கழித்தவர். கரும் பறவைகளில், பரந்த மேகங்களில் மெல்லிய பனித்திரையின் பின் அடுக்கடுக்காய்த் தொடரும் பெரும் மலைகளில் கால் நனைந்து சலித்துக் கொள்ளும் சிற்றலைகளில், தன் ஊமைத் தனத்தை ஒளித்து வைத்தவர். மலர்ந்து வாடிய பூக்களையும் தேய்ந்து மறைகிற நிலவையும் குறியீடாக்கி மாறுபட்ட இயற்கை நயத்தலைச் சாத்தியமாக்கியவர்.

‘உன்னை
உன் பிரிவை
நான் உணர்கிற போது
ஒருவரும் இல்லாத தனி வீதியில்
ஒரு மஞ்சள் விளக்கு கம்பத்தின் கீழ்
மெல்லிய மழைத்துளியில் நனைய நான்.
என் கண்களில் நீ
நினைவுகளாய் ஈரலிக்க…’

என்று கூறி காதல் நினைவுகளில் நனைகிறார். அவன் நினைவில் அமிழ்வதும் அழிவதும் பெண்ணியாவுக்குப் பிடித்திருக்கிறது. அவனது குளிர்கரங்கள் பற்றி கைவிரல்கள் சூடேறினாலும், அவனது இரவுகள் பனிதூவினாலும் அவன் பிரிவை தூக்கியெறிந்து விட்டுத் தன்பாட்டில் பயணிக்கிற தன்மை பெண்ணியாவுக்கு இருக்கிறது.

இவரது கவிதைகள் பேசும் முக்கிய பொருள்:

1) பெண் பற்றிய சிக்கல்களும், விடுதலையை அவாவுகிறதன்மையும்.
2) காதல்.
3) இயற்கை

பரம்பரை பரம்பரையாக இருட்டுக்குள் இருக்கும் தன் மூதாதைகளிடம் என்னை வாழ விடுங்கள் அல்லது கொன்று போடுங்கள் எனக் கேட்கும் பெண்ணியா சம்பிரதாயங்களால் பிழிந்து கயிற்றில் தொங்கவிடும் ரகசியம் வாய்ந்த மூலங்கள் பற்றி அலுத்துப் போகிறார். தகப்பனின் நம்பிக்கையற்ற பார்வைகளினூடும், தாயின் குமுறல்களினூடும், உறவுகளின் சகிக்க இயலாத பேச்சுக்களினூடும் வாழ்வேன் என்று மார்தட்டிக் கொள்ளும் துணிச்சல், எதுவெல்லாம் தம் உரிமைகள் வென்று சுதந்திரம் பற்றிப் பறந்து திரிகின்றனவோ அதுவெல்லாமாய் தன்னை நினைத்துக் கனவு காணுகிற தன்மை இவருக்குண்டு.

"முற்றிலும் மாறான மனித அனுபவங்களையும் அவற்றைப் பதிவு செய்வதற்கான அவசியத்தையும் ஒரு கவிஞர் கட்டாயம் உணர்ந்திருக்க வேண்டும். அன்றாட வாழ்வின் சிக்கல்களை பதிவாக்கியிருக்கும் பெண்ணியா சமூக அனுபவங்களை ஏன் தவற விட்டார் என்ற கேள்வி எழுகிறது. "

ஒரு பெண்ணுக்குரிய அனுபவங்கள், அவளின் குடும்ப உறவுகளுடன் மாத்திரம் கட்டுப்பட்டவையல்ல. தந்தையின் பூடகத் தன்மையையும், வாழ்க்கைக் கடப்பாடுகளையும் கதைக்குமளவுக்கு கலாச்சார மத ரீதியில் பெண்ணை மறுதலித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சம்பிரதாயங்களில் கட்டுண்ட அவரது வாழ்க்கைப் பின்னணியையும், அதற்குள்ளிருந்து வெளிவரும் சமூக, அரசியல், பொருண்மியக் கோட்பாடுகளையும், அதனை அர்ச்சிக்கிற அவரது பார்வை என்ன என்பதையும் ஏன் தெளிவு படுத்தவில்லை என்ற கேள்வியுடன், இவர் இந்த வாழ்க்கையை நிராகரித்து அந்நியமயப்பட்டுப் போகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நாத்தழுதழுக்க வந்து விடும் பெண் சோகமும், காதலிலிருந்து கிளைத்தெழுகிற பிரிவின் கதைகளும் என்ற இரண்டிற்கு மிடையிலாகவே இவரது கவிதை மொழி விழுகிறது. அவரது கவிதைகளும் அதையே கதைக்கிறது. போலி இருப்பை மறுதலிக்கும் உக்கிரம் விடியலுக்காகப் பிரயாசைப்படும் தனித்த குயிலின் சோகம் இவையே இவரது கவிதையின் பாடு பொருட்கள்.

‘இன்றைய பொழுதில்
எனக்கு அவளும் இல்லை
அந்த உலகும் இல்லை’
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையிலான வேறுபாடு என்பது மேய்ந்து திரியும் பசுவுக்கும், காட்டெருமைக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது.

இவரது கவிதையின் உயிர்நாடி எளிமை. அதைத் தொட்டு அணுகியிருக்கிறார். ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ என அழகாக எளிமையாகக் கூறுகிற அதே நேரம், சிந்திக்க வைக்கிற கவிதை மொழி பெண்ணியாவுக்குக் கைகூடியுள்ளது. ‘நான் துயிலறுத்திருக்கிறேன்’ போன்ற கவித்துவமான சொற்களின் சேர்க்கையும் ஆங்காங்கே காணப்படுகிறது. இந்தத் தொகுதி அது பேசும் பொருள், அதன் எளிமை என்பவற்றாலேயே முக்கியப்பட்டுப் போகிறது. கவிதையின் எண்ணிக்கையை விட அதன் கனம் தான் படைப்பாளியின் இருப்பைத் தக்க வைக்கிறதென்ற உண்மையையும் விளங்கச் செய்கிறது.

தேவைக்கு அதிகமாகச் சொல்வத்கும், சொற்சிக்கனத்தை சில சமயங்களில் கவனத்தில் எடுக்காத தன்மையும்... இப்படி அலுப்படைய வைக்கிற பலவீனங்களைப் பலவீனம் என்று சொன்னால், திறந்த நிலையிலான எளிமையும், பேசும் பொருட்களும் இவரது கவிதையில் பலம் என்று சொல்லலாம். அதோடு துருப்பிடித்த சமூக விழுமியங்களை வலியோடு பேசுகிற குரலும் கவனிக்கப் பட வேண்டியது. ‘கல்’ ‘வெறுமை’ போன்ற கவிதைகள் கவனிப்பிற்குரியவை.

‘மழைக்காலங்களில்
அடுப்பில் வைத்துக் கறுத்த
சட்டியின் நிறம் போன்ற
அதன் தண்டு’ -

என்ற படிமம் வழக்கமாக கையாளுகிற படிமங்களைத் தூக்கியெறிந்து விட்டு தான் புழங்கிக் கொண்டிருக்கும் உலகிலிருந்து ஒரு படிமத்தை எடுத்தாளுகிற வல்லமை பெண்ணியாவுக்கே உரியது என்பதைக் காட்டுவதோடு அவருக்கான பாதை அடுப்புக்கும் சட்டிகளுக்கும் இடையிலேயே மட்டும் திறந்து விடப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.

‘எப்பிறவியின் சாபமோ
நானும் அவர்களும் அறியோம்
ஒரு யுகத்திலும் எறிந்து விடாதபடி
கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி
திருப்பிப் பிடித்திருப்பது எவருடைய கைகளோ’

என்று யதார்த்தத்தை படிமத்தின் மூலம் எழுதுகிற மனத்தின் வெளிப்பாடாயும் தெரிகிறது.அந்தரங்க அனுபவத்தை இவர் கதைக்கும் போது தியானித்தலையும் கதை சொல்லல் கலையையும் கலந்திருக்கிறார். ஆனாலும் எந்த வடிவத்துக்குள்ளும் அடங்காத தனிக்கோட்டுக் கவிதைகளும் சில இடங்களில் கலந்திருக்கிறது.
தான் என்ற சுயம் ஓங்கி ஒலிக்க அக நிலையில் நின்று விடுதலையை யாசிக்கிற, வேலி தாண்டிய கூக்குரலே இவரது கவிதையின் எல்லையும் ஆழமுமாக விரிகிறது. மிருகத்தனத்தின் முடிச்சுக்கள் தேடியலையும் அவரது விரல்களிலேயே அவரது கவிதைகளுக்கான இருப்பும் அர்த்தமும் வழிகிறது. நவீன கவிதைகளின் தொனியில் புனையப்பட்டிருப்பதனால் தெரிந்தோ தெரியாமலோ இவரது கவிதைகளில் அழகியல் அனுபவம் மட்டுப்பட்ட அளவிலேயே கிடைக்கிறது. ஆனால், கவிதையின் பயன் என்பது அழகியல் அனுபவத்துடன் மட்டும் முடிந்து போகிற ஒன்றல்ல. அது இலக்கிய மரபில் ஏற்படுத்த வேண்டிய தாக்கங்களையும் சுட்டிக் காட்டுவது.
அந்த வகையில்,

- தெரிந்தெடுத்த பாடு பொருள்.
- புலப்பாட்டு உத்தியில் காட்டப் பட்ட எளிமை.
- காலாதி காலமான சமூக மரபை கேள்விக்குள்ளாக்குவதன் ஊடாக அந்த சமூக மரபில் தொங்கிக் கொண்டிருக்கும் இலக்கிய மரபையும் கேள்விக்குள்ளாக்குவது.
- காத்தான் குடியில் இருந்து வெளிவரும் முதல் பெண்கவிதைத் தொகுதி என்ற வகையில் அப்பிரதேசத்தின் இலக்கிய வரலாற்றுப் போக்குக் கோட்டை அசைத்தமை. ஆகியவற்றைப் பலங்களாகக் காணலாம்.

- மட்டுப்படுத்தப் பட்ட பாத்திரப் படைப்பின் சிருஷ்டிப்பு. (தந்தை - காதலன் - தோழி)
- அடைக்கப் பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு பாடுவது.
- சமூக விமர்சனம் இடம்பெறாதது பற்றிய கேள்விகள் என்பவற்றைக் குறைகளாகவும் சுட்டலாம்.

மொத்தத்தில், நவீன கவிதையின் திறந்த நிலை சாத்தியமாக்கப்பட்டு கவிதை வனப்பு பெருமளவுக்கு கலைக்கப்பட்டிருக்கிறது. பெண்ணியா சிதைந்த காலத்தின் முன் திகைத்துப் போன கண்களைப் பிடுங்கியெறிந்து விட்டு கவிதை புனைய முயன்றிருப்பதும் தெரிகிறது. அவரது சிறகுகளின் மீது நீளும் எல்லாக் கைகளுக்கெதிராகவும் ஆரம்பிக்கப் பட்ட பயணம் இன்னொரு கவிதைத் தொகுதியும் எமக்காக காத்துக் கொண்டிருப்பதை புலப்படுத்துகிறது.

(பெண்ணியாவின் கவிதைத்தொகுதிற்கு பலர் விமர்சனங்களை எழுதியுள்ளனர். ஊர்வசி,ஓட்டமாவடி அறபாத், நளீம், தவசஜிதரன் நளாயினி, புதியமாதவி ஆகியோர் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ராசு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி அவரின் பார்வையில் பெண்ணியாவின் கவிதைகளை விமர்சிக்கிறார் )

Feb 2007

நன்றி: ஊடறு